»   »  விரக்தியில் விக்ரம்

விரக்தியில் விக்ரம்

Subscribe to Oneindia Tamil

பீமா வெளியாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டிருப்பதால் சீயான் விக்ரம் கடும் ஏமாற்றத்திலும், விரக்தியிலும் இருக்கிறாராம்.

விக்ரம் படங்கள் லேட்டாக உருவாகி, வெளியாவது சமீப காலமாக ஒரு வழக்கமாகவே மாறியுள்ளது. அந்நியன் ரொம்ப நாட்களாக தயாரிப்பில் இருந்து வெளியானது.

அடுத்து வந்த மஜாவும் ஒரு வருடத்தை சாப்பிட்டு விட்டுத்தான் ரிலீஸானது. மஜாவுக்குப் பிறகு விக்ரம் நடித்த ஒரு படமும் வெளியாகவில்லை. ஆனால் இரண்டு விளம்பரப் படங்களில் மட்டுமே விக்ரம் நடித்தார்.

மஜாவுக்குப் பிறகு விக்ரம் ஒத்துக் கொண்ட படம் பீமா. இப்படம் படு தாமதமாக வளர்ந்து வந்தது. இதனால் விக்ரமின் ரசிகர்கள், ஏன் விக்ரமே கூட பெரும் ஏமாற்றத்திலும், விரக்தியிலும் மூழ்கியுள்ளாராம்.

சாமி படத்திற்குப் பிறகு விக்ரமும், திரிஷாவும் இணைந்து உசுப்பலாக நடித்திருக்கும் படம் பீமா. தாதாயிஸக் கதையாக இருந்தபோதிலும், ரொமான்ஸுக்கும் குறைச்சல் இல்லாமல் படம் படு புஷ்டியாக உருவாகியிருக்கிறது.

ஸ்விட்சர்லாந்து, நியூசிலாந்து, சென்னை, மதுரை என பல ஊர்களில் உருவாகி, வளர்ந்துள்ள பீமா ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது. ஏ.எம். ரத்னம் தயாரித்துள்ளார், லிங்குச்சாமி இயக்கியுள்ளார்.

படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து, ரிலீஸுக்கு ரெடியாகிய நிலையில், சிவாஜி குறுக்கிட்டு விட்டது. சிவாஜி ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அரண்டு போன ரத்னம், இப்படியே படத்தை விட்டால் சிக்கலாகி விடும் என்பதால் ரிலீஸைத் தள்ளி வைத்துள்ளார்.

மேலும் நல்ல தியேட்டர்களும் கிடைக்கவில்லையாம். ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகுதான் தியேட்டர் கிடைக்கும் நிலை உள்ளதாம். இதனால் படம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை.

பீமாவை முடித்து விட்ட விக்ரம் அடுத்த படமான கந்தசாமி குறித்த சிந்தனைகளுக்குப் போய் விட்டார். கலைப்புலி தாணு உருவாக்கி வரும் இப்படத்தை விக்ரம் பெரிதாக நம்பியுள்ளார். அந்த அளவுக்கு கதை படு ஸ்டிராங்காக உள்ளதாம்.

தீபாவளிக்கு கந்தசாமி கண்டிப்பாக வந்து விடும் என்று தாணு உறுதியாக கூறியுள்ளார். அதற்குள் பீமா வந்து விடுமா என்பதுதான் கோலிவுட்டில் நிலவு பேச்சு.

இளைத்துப் போவதற்குள் பீமாவை ரிலீஸ் பண்ணிடுங்க சாமிகளா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil