»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் உருவாகும் அந்நியன் படத் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

பாய்ஸ் படம் வெற்றி பெற்றிருந்தால் பாரதிராஜாவை மிஞ்சிய இயக்குநராக தமிழ் சினிமாவில் சாதனை படைத்திருப்பார் ஷங்கர்.

பாரதிராஜாவும், ஷங்கரும் தொடர்ச்சியாக 5 வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்கள். பாரதிராஜாவை விட ஒரு படி முன்னேறும் வாய்ப்பு ஷங்கருக்கு இருந்தபோதும், தான் தேர்ந்தெடுத்த கதையில் ஆபாசத்தைப் புகுத்தவே படம் படுதோல்வியடைந்தது.

ஷங்கரையும், வெகுஜனப் பத்திரிக்கைகளிலும், இலக்கியப் பத்திரிக்கைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே எழுத்தாளரான சுஜாதாவையும் (வசனம் இவரே) பத்திரிக்கைகள் அனைத்தும் விமர்சனங்களால் தாளித்து எடுத்துவிட்டன.

அதையெல்லாம் துடைக்கும் விதமாக அடுத்து ஒரு வெற்றிப் படத்தை தர வேண்டிய கட்டாயத்தில் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

கமலுக்காக ஷங்கர்-சுஜாதா உருவாக்கி வைத்திருந்த விஞ்ஞானக் கதையில் இப்போது நடிப்பவர் விக்ரம்.

சீயான் ஆகி சாதித்த பின்னர் விக்ரமே தேடிப் போய் வாய்ப்பு கேட்ட இயக்குநர் ஷங்கர்தான்.

கமல் அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிக்கக் கூடியவர் என்பதால், ஷங்கரும் விக்ரமுக்கு ஓகே சொல்லிவிட்டார். விக்ரமுக்கு ஜோடியாக முதலில் த்ரிஷா நடிப்பதாக இருந்தது. இப்போது சதா அந்த வாய்ப்பை பிடித்துக் கொண்டார்.

படத்தில் பிரகாஷ்ராஜ், நெடுமுடி வேணு, கலாபாவன் மணி, விவேக் ஆகியோரும் நடிக்கிறார்கள். தனது ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பதிலாக அவரது சீடர் ஹாரிஸ் ஜெயரஜை புக் செய்துள்ளார்.

ஹாலிவுட் பக்கம் பிஸியாகிவிட்டதால், தன்னை இப்படத்தில் விடுவிக்கும்படி ரஹ்மானே ஷங்கரிடம் பர்ஸனலாகக் கேட்டுக் கொண்டாராம்.

படத் தொடக்கவிழா ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்தது. படத்தை கோடிக்கணக்கில் கொட்டி எடுக்கப் போவது தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.

படத் துவக்க விழா அழைப்பிதழையே மிக அட்டகாசமாக தயாரித்திருக்கிறார்கள். முன்பக்கத்தில் பழங்கால கல்வெட்டுக்கள் போன்று தமிழ் எழுத்துகள்.

முதல் பக்கத்தில் காளை மாட்டின் ரப்பர் பொம்மை ஒட்டப்பட்டுள்ளது.

இரண்டாம் பக்கத்தில் மக்கள் கூட்டத்தில் ஆஜானுபாகு தோற்றத்தில் விக்ரம். மறுபக்கத்தில் வித்தியாசமான கோணங்களில் விக்ரமின் பாக்கெட் டைரி சைஸ் போட்டோக்களும் இடம் பெற்றுள்ளன.

படத் துவக்க விழாவில் ஏவி.எம் சரவணன், இப்ராஹிம் ராவுத்தர், பிரமிட் நடராஜன், பாரதிராஜா, செல்வமணி, எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார், தரணி, சேரன், விக்ரம், வைரமுத்து, சுஜாதா, பூஜா, தியா, சுவாதி,சொர்ணமால்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்குப் பின் பாடல் பதிவு தொடங்கியது.

வரும் பொங்கலுக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்தின் தெலுங்குப் பெயர் அபாரிசித்துடு.

விக்ரம், ஷங்கர், ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், ஹாரிஸ் ஜெயராஜ், வைரமுத்து, வி.டி.விஜயன், சுஜாதா, சாபுசிரில், ராஜூ சுந்தரம், பீட்டர் ஹெய்ன் என அந்தந்த துறையின் முன்னணி ஆட்கள் கூட்டணி அமைத்துள்ளதால் இப்படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil