»   »  'ஊமைப் படம்': விக்ரம் ரசிகர்கள் ரகளை!

'ஊமைப் படம்': விக்ரம் ரசிகர்கள் ரகளை!

Subscribe to Oneindia Tamil
Vikram with Trisha

சென்னை உதயம் தியேட்டரில் திரையிடப்பட்ட விக்ரம் நடித்த பீமா படம், எந்தவித சப்தமும் இல்லாமல் ஓடியதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தியேட்டரில் இருக்கைகளை உடைத்து ரகளையில் இறங்கினர்.

சென்னை அசோக் நகரில் உள்ள உதயம் திரையரங்க வளாகத்தில், விக்ரம், திரிஷா நடித்துள்ள பீமா படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று இரவு காட்சிக்கு கூட்டம் அலை மோதியது. விக்ரமின் ரசிகர்களுடன், திரிஷாவின் ரசிகர்கள், ரசிகைகளும் பெருமளவில் படம் பார்க்க திரண்டிருந்தனர்.

படம் ஓடத்தொடங்கிய சிறிது நேரத்தில் படம் ஊமைப் படமாக மாறியது. வசனமோ, பின்னணி இசையோ கேட்கவில்லை. சுமார் அரை மணி நேரம் படம் இப்படியே ஓடியதால் எரிச்சலடைந்த ரசிகர்கள் கூச்சலிட்டனர்.

இதையடுத்து குழப்பமடைந்த ரசிகர்கள், ஆப்பரேட்டர் அறையைப் பார்த்து சத்தம் போட்டனர். அப்படியும் குறை சரி செய்யப்படாமல் தொடர்ந்து படம் ஓடியது. இப்படியாக சுமார் அரை மணி நேரம் படம் ஓடி விட்டது.

கடுப்பான ரசிகர்கள் ரகளையில் இறங்கினர். இருக்கைகளை உடைத்து கலாட்டாவில் குதித்தனர்.

அவர்களை தியேட்டர் ஊழியர்கள் அமைதிப்படுத்த முயன்றபோது அடிதடி ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

குமரன் நகர் போலீசார் விரைந்து வந்து ரசிகர்களை அமைதிப்படுத்தினர். ஓவர் ஆட்டம் போட்டவர்களை தியேட்டரை விட்டு வெளியேற்றினர்.

இதையடுத்து படம் நிறுத்தப்பட்டது. பின்னர் சவுண்ட் என்ஜீனியர்கள் வரவழைக்கப்பட்டு தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. அதற்குள் 1 மணி நேரம் ஓடிவிட்டது.

அதன் பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் படம் ஆரம்பத்திலிருந்து ஓட்டப்பட்டது.

ஆனால் பெரும்பாலான பெண்கள் தியேட்டரை வெளியேறி விட்டதால், ஆண்கள் மட்டும் படத்தைப் பார்த்து ரசித்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil