»   »  கமலுடன் இணையும் டிஸ்னி!

கமலுடன் இணையும் டிஸ்னி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kamal Hassan

கலைஞானி கமல்ஹாசன், உலகப் புகழ் பெற்ற வால்ட் டிஸ்னியுடன் இணைகிறார். இருவரும் இணைந்து கமல்ஹாசனின் மர்மயோகிக்கு உயிர் கொடுக்கப் போகிறார்கள். இந்த மாபெரும் படத்தின் இணைத் தயாரிப்பாளராக பரத் பாலா செயல்படுவார்.

உலகத் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 10 வேடங்களில் நடித்து வரும் கமல்ஹாசனின் தசாவதாரம் முடிவடைந்துள்ளது. இப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் படு மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. மார்ச் இறுதியில் இந்தப் பணிகள் முடிந்து முதல் கட்டமாக ஆடியோ ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் தனது அடுத்த படமான மர்மயோகிக்கு தயாராக ஆரம்பித்து விட்டார் கமல். தசாவதாரம் ஆடியோ வெளியீட்டுக்கு முன்னதாக மர்மயோகியின் பணிகளைத் தொடங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

மர்மயோகியை கமல்ஹாசனே இயக்கவுள்ளார். முதலில் பரத் பாலாவின் தயாரிப்பில் மட்டும் இப்படத்தை உருவாக்க கமல் திட்டமிட்டிருந்தார். இவர் வேறு யாருமல்ல, ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து வந்தே மாதரம் ஆல்பத்தை உருவாக்கி நாடு முழுவதும் தேச பக்தி அலையைப் பரப்பியவர். சமீபத்தில் ரஹ்மானை வைத்து ஜனகனமன ஆல்பத்தையும் உருவாக்கி வெளியிட்டார்.

இந்த நிலையில்தான் கமலுடன் கரம் கோர்க்க விருப்பம் வெளியிட்டது ஹாலிவுட்டின் மிகப் பெரிய நிறுவனமான வால்ட் டிஸ்னி. சமீபத்தில்தான் இந்த நிறுவனம் இந்திய திரைத் துறைக்குள் காலெடுத்து வைத்தது.

யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரோட்சைட் ரோமியோ என்ற படத்தை உருவாக்கியுள்ளது. தற்போது கமல் மூலமாக தென்னிந்தியாவுக்கு வருகிறது.

சமீபத்தில் மர்மயோகியின் லொகேஷன் பார்ப்பதற்காக கமல் தாய்லாந்து சென்றிருந்தார்.

பிப்ரவரி 3வது வாரத்தில் மர்மயோகி படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். அதன் பின்னர் அமெரிக்கா செல்கிறார் கமல். அங்கு வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் படத் தயாரிப்பு தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கிறார்.

மர்மயோகியில் மொத்தம் 3 நாயகிகளாம். அதில் இருவராக ஆசினையும், ஹேமமாலினியையும் கமல் முடிவு செய்து விட்டார். அடுத்த நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளனர்.

தசாவதாரம் படத்தைத் தொடர்ந்து 2வது முறையாக கமலுடன் ஆசின் இணைகிறார் என்பது நினைவிருக்கலாம்.

மர்மயோகி மூலம் கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் மீண்டும் இணைகிறார்கள். அதேசமயம், தசாவதாரம் படத்தின் பின்னணி இசையை மட்டும் கவனிக்குமாறு ஏ.ஆர்.ரஹ்மானை கமல் கேட்டுக் கொண்டாராம். ரஹ்மானும் அதற்கு இசைந்து, பின்னணி இசையமைக்கிறாராம்.

மர்மயோகி குறித்து கமல் கூறுகையில், மர்மயோகி எனது அடுத்த படைப்பு. மிகுந்த ஆர்வமாக உள்ளேன். இது தமிழ் மற்றும் இந்தியில் உருவாகவுள்ளது. 7வது நூற்றாண்டு கதைக் களம் இது. தமிழில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக எடுக்கப்படவுள்ளது. படத்தின் திரைக்கதை, இயக்கத்தை நானே கவனிக்கிறேன்.

வெற்றியின் அளவு என்ன என்பதை தெளிவாகச் சொல்ல முடியாது. ஒரு கட்டத்தில் நிறைய பணம் சம்பாதிப்பதை வெற்றியாக கருதினேன். பின்னர் சிறந்த நடிகராக, உயரத்திற்குப் போனபோது அதை வெற்றியாக கருதினேன்.

ஒரு கட்டத்தில் ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டும் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அந்தப் படத்தையும் சிறந்த படமாக கொடுக்க தீர்மானித்தேன்.

அப்படித்தான் தசாவதாரம் பிறந்தது. இப்போது மர்மயோகி உருவாகவுள்ளது என்றார் கமல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil