»   »  ரஜினிக்கு லண்டனில் மெழுகு சிலை?

ரஜினிக்கு லண்டனில் மெழுகு சிலை?

Subscribe to Oneindia Tamil
Click here for more images
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்களிடமிருந்து பெருமளவில் கோரிக்கைகள் வந்ததால், அவரது முழு உருவ மெழுகுச் சிலையை நிறுவ புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட் மியூசிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

லண்டனில் உள்ள மேடம் டுசாட் மியூசியும் உலகப் புகழ் பெற்றது. இங்கு உலகப் புகழ் பெற்ற பிரமுகர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியம் இந்த அளவுக்குப் புகழ் பெற்றதற்குக் காரணம், இங்கு வைக்கப்பட்டிருக்கும் சிலைகள், அந்தப் பிரமுகர்களை அப்படியே அச்சில் வார்த்தெடுத்தது போல தத்ரூபமாக இருப்பதுதான்.

இந்திய பிரமுகர்களின் சிலைகளும் இங்கு உள்ளன. சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களில் ஒருவர்.

இந்த நிலையில் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிலையும் இங்கு இடம் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ரஜினி ரசிகர்களிடமிருந்து பெருமளவில் கோரிக்கைகள் வந்ததால் ரஜினி சிலையை இங்கு நிறுவ மியூசிய நிர்வாகம் தீர்மானித்துள்ளதாம்.

ரஜினியின் சிறப்புகளை வலியுறுத்தி அவரது சிலையை நிறுவ வேண்டும் என்று கோரி இதுவரை மியூசியத்திற்கு 12 ஆயிரம் இமெயில் பெட்டிஷன்கள் வந்து குவிந்துள்ளதாம்.

சமீபத்தில்தான் இந்த இ மெயில் பிரசாரத்தை ரஜினி ரசிகர்கள் தொடங்கினர். இதற்காக http://www.petitiononline.com/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி அதன் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் துசாத் மியூசியத்தில் ரஜினியின் மெழுகுச் சிலை இடம் பெற அந்த மியூசியத்திற்கு கோரிக்கைகளை அனுப்புங்கள் என கோரிக்கை விடப்பட்டது.

ரஜினியின் லேட்டஸ்ட் மெகா ஹிட்டான சிவாஜி படத்தின் வசூல் உள்ளிட்ட சிறப்புகளையும் அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் விலாவாரியாக தெரிவித்திருந்தனர். மேலும் உலகளாவிய அளவில் ரஜினிக்கு உள்ள வரவேற்பையும் விளக்கியிருந்தனர். இதுதவிர ரஜினியின் பிற சிறப்புகளையும் விளக்கியிருந்தனர்.

இந்த பெட்டிஷன் பிரசாரத்தில் இதுவரை 11 ஆயிரத்து 453 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

ரஜினி ரசிகர்களின் அந்த கோரிக்கை மனுவில், இந்தியாவிலேய அதிக ஊதியம் பெறும் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. இந்தியாவின் மிகப் பெரிய நடிகராகவும் ரஜினி திகழ்கிறார். 30 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தென்னிந்தியாவில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.

இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் ரஜினியின் படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கிறது. சமீபத்தில் ரிலீஸான ரஜினிகாந்த்தின் சிவாஜி படம், இங்கிலாந்தின் டாப் 10 வரிசையில் இடம் பெற்று புதிய சாதனை படைத்தது. அது மட்டுமல்லாது, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு, ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் சிவாஜி படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்தியாவில் உள்ளவர்கள் தவிர இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் ரஜினிக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இங்கிலாந்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். பிரான்சில் 60 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களின் மனம் கவர்ந்த நாயகனாக ரஜினிகாந்த் உள்ளார்.

ரஜினியின் புகழ் ஜப்பானிலும் பரவியுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கே, ரஜினியின் ஜப்பான் புகழ் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வியந்து பேசியுள்ளார். இந்தியாவையும், ஜப்பானையும் கலையுலகின் மூலம் இணைக்கும் சக்தியாக ரஜினி உள்ளார் என்று மன்மோகன் சிங் பாராட்டியுள்ளார்.

மேற்கண்ட சிறப்புகளின் காரணமாக மேடம் டுசாட் மியூசியத்தில் ரஜினிகாந்த்தின் மெழுகுச் சிலை இடம் பெற வேண்டும் என விரும்புகிறோம். எனவே ரஜினிகாந்த்தின் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

குவிந்து வரும் கோரிக்கைகளைப் பார்த்த டுசாட் மியூசியம், ரஜினியின் மெழுகுச் சிலையை நிறுவ தீர்மானித்துள்ளதாம். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை அவர்கள் வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது.

ரஜினி ரசிகர்களின் இந்த பிரசாரத்தைப் பார்த்து கமல் ஹாசன் ரசிகர்களும் பிரசார வேட்டையில் குதித்துள்ளனர். இதுவரை 900 ரசிகர்கள் கமல் சிலையை நிறுவக் கோரி மனு செய்துள்ளனராம்.

இரு 'தலை'களும் சிலைகளுக்குத் தகுதியானவர்கள்தான்!

Read more about: rajini
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil