»   »  கருணாநிதியிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்கும் சுவாமி

கருணாநிதியிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்கும் சுவாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Trisha

சென்னை: எனது தொலைபேசியை ஒட்டு கேட்க உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதி மீது ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

என்னுடைய செல்போன், தொலைபேசி மற்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் சட்ட விரோதமாக ஒட்டு கேட்கப்படுகின்றன. இது குறித்து தமிழக தலைமை செயலருக்கு நான் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.

அரசியல் சட்ட விதி 19ன் கீழ் எனக்குள்ள அடிப்படை உரிமையை மீறியதற்காக முதலமைச்சர் கருணாநிதி மீது ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளேன்.

ஏற்கனவே கடந்த 1988 ஆம் ஆண்டு கர்நாடக முதலமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே, தொலைபேசி ஒட்டு கேட்கும் விவகாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஏற்பட்ட கதிதான் முதலமைச்சர் கருணாநிதிக்கும் ஏற்படும்.

1997 ஆம் ஆண்டு தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப்சிங் தீர்ப்பு ஒன்றை கொடுத்துள்ளார். ஒரு தொலைபேசி ஒட்டு கேட்பதற்கான வரைமுறையையும் கொடுத்துள்ளார். அந்த வரைமுறையை முதலமைச்சர் கருணாநிதி பின்பற்றவில்லை.

சேது சமுத்திர திட்டம் தற்போது ICUக்கு ('தீவிர சிகிச்சை பிரிவு) போய்விட்டது. முதலமைச்சர் கருணாநிதிதான் அதற்கு ஆக்சிஜன் கொடுத்து தக்க வைத்துள்ளார். அந்த திட்டம் கைவிடப்படுவது உறுதி.

டி.ஆர்.பாலு எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் நேர்மையற்றவர் என்று நீதிமன்றம் மூலம் நிரூபிக்க முடிவு செய்துள்ளேன். அவர் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உரிமையை மீறி விட்டதாக அவர் மீது உரிமை மீறல் அரசு கொண்டு வந்துள்ளது. இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டசபையில் படித்ததற்காக உரிமை மீறல் கொண்டு வர முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. உரிமை மீறல் கொண்டு வந்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் சுவாமி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil