twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் படத்திலிருந்து ஜெனிலியா நீக்கம்-ஆஸ்கர் ரவிச்சந்திரன்

    By Chakra
    |

    Genelia
    சென்னை: தடையை மீறி இலங்கை பட விழாவில் பங்கேற்ற நடிகை ஜெனிலியாவை விஜய் படத்திலிருந்து நீக்கியுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். விழாவுக்குப் போகவில்லை என்று அவர் பொய் சொல்வதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அவருக்கு எந்த ஒத்துழைப்பும் தரப்படாது என்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறியுள்ளார்.

    தமிழர்களை படுகொலை செய்த இலங்கையில், சர்வதேச இந்திய பட திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த பட விழாவுக்கு நடிகர்-நடிகைகள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் செல்லக்கூடாது என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் கலந்துகொண்ட கூட்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டு கூட்டத்தின் வேண்டுகோளை மீறி கலந்துகொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.

    இதனை ஏற்று கொழும்பு நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய இலங்கை சர்வதேச இந்திய திரைப்பட விழாவை பல நடிகர்கள் புறக்கணித்து விட்டார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், சாருக்கான், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் உள்பட பலர் அந்த பட விழாவுக்கு போகவில்லை.

    தமிழ் நடிகர்-நடிகைகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்ததால், இலங்கை பட விழா படுதோல்வியடைந்துள்ளது. இலங்கை பத்திரிகைகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் அரசை கடுமையாக சாட ஆரம்பித்துள்ளனர்.

    அதேநேரம் தடையை மீறி சல்மான்கான், ஹிரித்திக் ரோஷன், விவேக் ஓபராய், சஞ்சய்தத் உள்ளிட்ட சில இந்தி நடிகர்கள் இலங்கை பட விழாவில் கலந்து கொண்டார்கள். நடிகை ஜெனிலியா, காதலர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் விழாவில் பங்கேற்றார். இதுபற்றி சிங்கள மீடியாவிலும் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

    எனவே இலங்கை சென்ற நடிகர் நடிகைகளின் படங்களுக்கு தென்னிந்திய திரையுலகம் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று நேற்று அறிவித்தது. இலங்கை பட விழாவில் கலந்துகொண்ட நடிகர்-நடிகைகளின் படங்களை திரையிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர்.

    ஜெனிலியா கோவாவைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் அறிமுகமாகி புகழ்பெற்றதே தமிழ்ப் படங்களின் மூலம்தான். இப்போதும் உத்தமபுத்திரன் படத்தில் தனுஷுடன் நடிக்கிறார்.

    தடையை மீறி இலங்கை பட விழாவில் கலந்துகொண்டதால், ஜெனிலியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி அறிவித்து இருக்கிறார்.

    இதேபோல் ஜெனிலியாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதனும் கூறியிருக்கிறார்.

    விஜய் படத்தில் இருந்து நீக்கம்:

    விஜய் கதாநாயகனாக நடிக்க, ஜெயம் ராஜா டைரக்ஷனில் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் 'வேலாயுதம்' என்ற புதிய படத்தில், ஜெனிலியா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

    தடையை மீறி ஜெனிலியா இலங்கை படவிழாவில் கலந்துகொண்டதால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம் எடுத்துள்ள முடிவுக்குக் கட்டுப்பட்டு ஜெனிலியாவை நீக்கியுள்ளதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

    தனுஷ் ஜோடியாக ஜெனிலியா நடித்துக்கொண்டிருக்கும் 'உத்தம புத்திரன்' படம் முடிவடையும் நிலையில் உள்ளது. அந்த படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவகரிடம் கேட்டபோது, "ஜெனிலியா மீது தமிழ் பட உலகம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்" என்றார்.

    ஜெனிலியா சொல்வது உண்மையா?:

    இதற்கிடையில், "இலங்கை பட விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை'' என்று ஜெனிலியா மறுத்திருக்கிறார்.

    ஆனால் அவரது மறுப்பில் உண்மையில்லை என்றும், காதலர் ரிதேஷுடன் விழாவுக்கு முதலில் போனவர் ஜெனிலியா. விஷயம் தெரிந்து தமிழ் சினிமாவில் பரபரப்பான முடிவுகள் எடுக்கப்படுவது தெரிந்ததும் அங்கிருந்து ஓடிவந்து விட்டார். அவரது பாஸ்போர்ட்டை சோதித்தால் விஷயம் தெரிந்துவிடும், என்றும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X