»   »  ஸ்ரேயா 'கனவில்' கல்லெறிந்தவர்கள்!

ஸ்ரேயா 'கனவில்' கல்லெறிந்தவர்கள்!

Subscribe to Oneindia Tamil
Shriya with Vikram
பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். அதிலும் கவர்ச்சிப் புயல் ஸ்ரேயாவின் பாவம் ரொம்பவே பொல்லாதது. வடிவேலுவுடன் ஒரே ஒரு பாட்டுக்கு ஆடினாலும் ஆடினார், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவருமே அவரை மேனகையை ஒதுக்கிய விசுவாமித்திரரைப் போலத்தான் கடூரமாகப் பார்க்கிறார்கள்.

'மழை'யில் நடிக்கும் வரை இவரது நிலை வாய்ப்புகளுக்காக இயக்குநர்களைத் தேடிப் போய்ப் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் சிவாஜியில் நடித்த பிறகு நம்பர் ஒன் நாயகி அந்தஸ்து தேடி வந்து ஒட்டிக்கொண்டது.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற சினிமா நியதிப்படி அவரும் வந்த வாய்ப்புகளையெல்லாம் மறுக்காமல் வாங்கிப் போட ஆரம்பித்தார்.

விஜய் படத்தில் நடித்தார். உடனே அஜீத்தும் தன் படத்தில் ஸ்ரேயாவைப் போட விரும்பினார். அய்ங்கரன் நிறுவனத்தின் படம், நல்ல சம்பளம் என்பதால் கேட்ட தேதிகளைக் கொடுத்தார் ஸ்ரேயா. ரூபாய் 50 லட்சம் வரை சம்பளம் எகிறியது.

அப்போதுதான் வந்தார் மாணிக்கம் நாராயணன். இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனம் ஆட ரூ.50 லட்சம் தருவதாகக் கூறினார். அம்மணிக்கு ஏக சந்தோஷம். முழுப் பணத்தையுமே அட்வான்சாக வாங்கிக் கொண்டு கால்ஷீட்டும் கொடுத்துவிட்டார்.

விஷயம் லேட்டாகத்தான் தெரிய வந்தது அஜீத்துக்கு. அடுத்த கணமே முடிவு செய்துவிட்டார் இனி தன் படத்தில் ஸ்ரேயா இல்லை என்று. காரணம் அவருக்கும் வடிவேலுவுக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சினை. (அது பெரும் கதை, இன்னொரு முறை விரிவாகச் சொல்கிறோம்.)

இன்னொரு பக்கம் ஏற்கெனவே பாதிப் படம் முடிந்த நிலையிலிருக்கும் கந்தசாமி யூனிட்டும் ஸ்ரேயாவை மிரட்டிக் கொண்டிருந்தது. இந்திரலோகம்... படத்துக்கு வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அதற்கும் மேல் நாங்கள் சம்பளம் தருகிறோம் என்று இயக்குநர் சுசி கணேசனே சொன்னதாகத் தகவல்.

இவர்களுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு சொன்னது சொன்னபடி இந்திரலோகத்தில்.... படப்பிடிப்புக்கு நேராக மதுரைக்கே போய் ஆஜர் ஆனார் ஸ்ரேயா.

விளைவு...

அட்வான்ஸ் போனாலும் பரவாயில்லை. ஸ்ரேயா வேண்டாம். இனி புதிய ஹீரோயின்தான் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் அஜீத். இடையில் ஸ்ரேயாவே சமரசத்துக்கு முன் வந்தும் வேலைக்காகவில்லை. இப்போது கத்ரீனா கைஃப் ஸ்ரேயாவின் இடத்தில்.

கந்தசாமியில் பாதி படப்பிடிப்பு முடிந்து விட்டதால், வேண்டா வெறுப்பாக அவரை எச்சரித்து விட்டிருக்கிறாராம் இயக்குநர்.

இதையெல்லாம் விட பெரிய இழப்பு ரோபோ படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்கவிருந்த வாய்ப்பு பறிபோனதுதான். ஐஸ்வர்யா ராய்க்கு இணையான அந்த வேடத்தில் நடிக்க முதலில் ஸ்ரேயாவைத்தான் முடிவு செய்திருந்தாராம் இயக்குநர் ஷங்கர். ஆனால் இப்போது அந்த இடம் ஸ்ரேயாவுக்கு இல்லை.

இது தவிர இன்னும் இரு படங்களில் நடிக்கவிருந்த வாய்ப்பும் ஆரம்பத்திலேயே பறிபோய்விட்டதாம் ஸ்ரேயாவுக்கு.

இப்போது தமிழில் அவருக்கு இரண்டு படங்கள்தான். ஒன்று கந்தசாமி, அடுத்தது தனுஷுடன்.

சிவாஜி வெற்றியால், இனி தமிழில் தானே நம்பர் ஒன் நாயகி என்று கனவு கண்டுகொண்டிருந்த ஸ்ரேயாவுக்கு, வடிவேலுவுடன் நடித்துவிட்டதால் ஏற்பட்ட 'பாவத்துக்காக' ஒவ்வொரு ஹீரோவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை.

ஒரு 'கைப்புள்ள'யால இந்த 'கவர்ச்சிப் பிள்ளை'க்கு வந்த நிலைமையைப் பாத்தீகளா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil