»   »  நம்ம வீட்டு விஜயலட்சுமி!

நம்ம வீட்டு விஜயலட்சுமி!

Subscribe to Oneindia Tamil
Vijaylakshmi
எல்லாரும் என்னை எங்க வீட்ல ஒரு பொண்ணு மாதிரியே இருக்கேன்னு பாசமா சொல்றாங்க... அதைத் தக்க வச்சிக்கிட்டாலே போதும் என்கிறார் அகத்தியனின் மகளும் தமிழ் திரையில் வெற்றித் தாரகையாக மின்னத் தொடங்கியிருப்பவருமான விஜயலட்சுமி.

அய்யோ... நல்ல தமிழ் பேசும் நடிகை தமிழில் ஒருவர் கூட இல்லையே என அவ்வப்போது பத்திரிகைகளும் விமர்சகர்களும் ஆதங்கப்படுவது வழக்கம். அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் பச்சைத் தமிழச்சியான விஜயலட்சுமி, தன் ஒரிஜினல் பெயரோடு நடிக்க வந்துள்ளார்.

சென்னை-28 படம்தான் விஜியின் முதல் படம். அதற்கு முன் ஹலோ தமிழா எனும் டி.வி நிகழ்ச்சியில் தோன்றினார். முதல் படமே பெரிய வெற்றிப் படமாக அமைந்து விட்டது. விஜியின் குடும்பப் பாங்கான தோற்றமும் இயல்பான நடிப்பும் அவருக்கு மேலும் சில நல்ல படங்களில் நாயகி வாய்ப்பைப் பெற்றுத் தந்தன. அப்படிக் கிடைத்த ஒரு நல்ல படம்தான் அஞ்சாதே.

இந்தப் படத்திலும் அருமையான வேடம் விஜிக்கு. சிரமமின்றி இயல்பாக அவர் அந்த வேடத்தைச் செய்திருந்த விதம் அனைவர் மனதிலும் அவருக்கு ஒரு தனி இடத்தை உறுதி செய்துவிட்டது.

தட்ஸ்தமிழுக்காக விஜயலட்சுமியைச் சந்தித்தோம்...

நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றிருப்பதில் சந்தோஷ வெள்ளத்தில் மிதக்கிறேன் என்றால் கூட மிகையில்லை. அதே நேரம் இது என் வீடு என்பதாலோ என்னமோ அந்த வெற்றிகளை பெரிதாகக் கொண்டாடத் தோன்றவில்லை. இங்கே உரிமையுடன் பல விஷயங்களை என்னால் செய்ய முடியும். அதே போல என்னைத் திருத்தவும் கண்டிக்கவும் உங்களுக்கு (ரசிகர்களுக்கு) உரிமை உள்ளது.

இந்த இரண்டு படங்களையுமே என் அப்பா பார்த்தார், மகிழ்ந்தார். திரையில் அதிகபட்ச நாகரீகத்துடன் எனது காட்சிகள் வந்திருப்பதில் அவருக்கு மகிழ்ச்சி.

சென்னை -28ஐப் பொறுத்த வரை அதில் எனது ரோல் சற்று சிறிதாக இருந்தாலும் அதிகம் பேசப்பட்டது. காரணம் எனக்கு தரப்பட்ட இனிமையான அந்த பாடல் காட்சி.

அஞ்சாதேவைப் பொறுத்தவரை மிக முக்கியமான வேடம் அது. நான் அதை நன்றாகச் செய்வேன் என நம்பி ஒப்படைத்தார். உங்கள் பாராட்டு, அந்த வேடத்தை நான் சிறப்பாகச் செய்துள்ளேன் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

ஆரம்பத்திலிருந்தே எனக்கு டப்பிங் குரல் வேண்டாம் கூறிவிட்டேன். சொந்த மொழியை இன்னொரு குரலை வைத்து ஏன் பேச வேண்டும்.

இப்போதைக்கு கதாநாயகி வேடங்களில் மட்டுமே கவனம் செலுத்துவேன். ஒரு பெரிய நடிகரின் படத்தில் தங்கை வேடத்தில் நடிக்கக் கேட்டார்கள். ஆனால் வேறு வழியின்றி அதை மறுக்க வேண்டியதாகிவிட்டது.

எனக்கும் துறுதுறுப்பான கவர்ச்சி வேடங்களில் நடிக்க ஆசைதான். ஆனால் கவர்ச்சி என்றால் அரைகுறை ஆடைகளில் அல்ல, நல்ல டீசன்டான உடைகளில் கூட கவர்ச்சியாகத் தோன்ற முடியும். கவர்ச்சி என்பதும் ஒருவித அழகுதானே... என்கிறார் விஜயலட்சுமி, விவரமாக.

அட, சுருக்கமா சுகாசினி, ரேவதிக்கு வாரிசுன்னு சொல்லுங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil