For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: ரம்பா

  By Staff
  |

  Ramba
  சென்னை: சாய்பாபாவுக்கு விரதம் இருந்ததால் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு விட்டது. மற்றபடி நான் தற்கொலைக்கெல்லாம் முயற்சிக்கவில்லை. நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று ரம்பா கூறியுள்ளார்.

  நடிகை ரம்பா உணர்விழந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வடபழனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. ஆனால் அவரது குடும்பத்தினர் இதை மறுத்திருந்தனர்.

  இந் நிலையில் நேற்று மாலை சிகிச்சை முடிந்து சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார் ரம்பா. பின்னர் செய்தியாளர்களை வரவழைத்து பேட்டி அளித்தார்.

  அப்போது அவர் கூறுகையில், நான் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி பரவியதால் ஹைதராபாத், பெங்களூர், மும்பை என பல ஊர்களிலிருந்தும் நிறைய பேர் போன் செய்து துக்கம் விசாரிப்பது போல பேசினார்கள். இதனால் நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். மன உளைச்சலுக்கு ஆளானேன்.

  எனது தந்தை இருதய நோயாளி. அவர் வருத்தப்பட்டார். அம்மா அழுது கொண்டே இருந்தார். நடக்காத சம்பவத்தை நடந்ததாக வதந்தி பரப்பி விட்டு விட்டார்கள். யார் இப்படி பரப்பியது என்று தெரியவில்லை.

  வியாழக்கிழமைதோறும் நான் சாய்பாபாவுக்கு விரதம் இருப்பேன். அப்படித்தான் கடந்த வியாழக்கிழமையும் விரதம் இருந்தேன். வெறும் திரவ ஆகாரம் மட்டுமே சாப்பிட்டேன். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு. அடுத்து சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி என்பதால் சத்தியநாராயணா விரதம் இருந்தேன். வீட்டில் பூஜை செய்து பிரசாதம் சாப்பிட்டேன். இதில் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு விட்டது.

  எனது குடும்ப டாக்டருக்குப் போன் செய்தபோது அட்மிட் ஆகி விடலாம் என்றார். இதன் காரணமாகவே மருத்துவமனையில் அட்மிட் ஆனேன். அப்போது புட் பாய்சன் ஆகியிருப்பதாக தெரிவித்தனர். பிரசாதத்தில் ஏதோ கோளாறு. இதனால் புட் பாய்சன்ஆகி விட்டது.

  நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏன் செய்து கொள்ள வேண்டும். எனது குடும்பத்தில் நான் ஒரு தேவதை. அவ்வளவு பிரியமாக என்னை எனது குடும்பத்தினர் கவனித்துக் கொள்கிறார்கள். தமிழக ரசிகர்களுக்கு நான் ஒரு 'டார்லிங்காக' உள்ளேன். எனக்கு விரோதிகளும் கிடையாது, எதிரிகளும் கிடையாது.

  போஜ்புரி நடிகர் ரவிகிஷனுடன் என்னை இணைத்துப் பேசுகிறார்கள். அவருக்கு கல்யாணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்குப் பதில் திருமணமாகாத, பணக்கார, அழகான இளைஞர் யாருடனாவது என்னை இணைத்துப் பேசியிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

  எனது குடும்பத்தினரை நேசிக்கிறேன், நம்புகிறேன். கடவுளுக்கு அப்புறம் எனது குடும்பத்தினர்தான் முக்கியம். இந்த வதந்தியை திருஷ்டியாக நினைத்துக் கொள் என எனது நலம் விரும்பிகள் கூறுகிறார்கள். அப்படியே எடுத்துக் கொண்டேன்.

  நான் சாக விரும்பவில்லை. கடவுள் கொடுத்த உயிரைப் போக்கிக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. திரி ரோஸஸ் படத்திற்காக நான் நஷ்டப்பட்டது உண்மைதான். அதற்காக உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

  முதலில் நான் சென்னையை விட்டே போய் விட்டதாக வதந்தி பரப்பினார்கள். இப்போது உலகத்தை விட்டே போய் விட்டதாக வதந்தி கிளப்பி விட்டு விட்டார்கள். நான் சென்னையை விட்டுப் போக மாட்டேன். இந்த உலகத்தை விட்டும் போக மாட்டேன்.

  தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறேன். மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் எனக்கு சொத்துக்கள் உள்ளன.
  அங்கெல்லாம் நான் தங்குவதில்லை. சென்னையில் உள்ள வீடு எனக்குப் பிறந்த வீடு மாதிரி. எந்த வெளிநாட்டுக்குப் போனாலும், சென்னைக்கு வந்து விடுவேன். இந்த வீட்டில் தங்கினால்தான் எனக்கு நிம்மதி. சென்னையை எனது சொந்த ஊர் போல நினைக்கிறேன். எனக்கு திருமணம் நடந்தாலும் சென்னையில்தான் நடக்கும்.

  எனது கல்யாண பொறுப்பை எனது பெற்றோரிடம் விட்டு விட்டேன். என்னை இந்த அளவுக்கு வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கும் உரிமையையும் கொடுத்து விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார் ரம்பா.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X