ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டுக்கு பறந்த ஹன்சிகா மோத்வானி..தீயாய் பரவும் போட்டோஸ்!
புதுடெல்லி : இந்த மாத தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை ஹன்சிகா மோத்வானியும், சோஹேல் கதுரியாவும் ஹனிமூனை கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.
நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக இந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் மாப்பிள்ளை பாடத்தில் நடித்து தமிழ் ஆடியன்சுக்கு பரீச்சியம் ஆனார்.
அதைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து இளசுகள் மனதில் இடம் பிடித்த ஹன்சிகா, டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி
நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது நீண்ட நாள் நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் முன், இருவரும் கட்டி அணைத்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்து அறிவித்து இருந்தார். இதையடுத்து, ஹன்சிகா மற்றும் சோஹேல் திருமணம் ஜெய்ப்பூரில் 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரண்மனையில் கோலாகலமாக நடந்தது.

தடபுடலாக நடந்த திருமணம்
நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு டிசம்பர் மாதம் 4ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மெஹத்தி விழா, இசை நிகழ்ச்சி என ஜெய்பூர் அரண்மனையே வண்ண விளக்குகளால் ஜொலித்தது. இதையடுத்து, சிந்தி பாரம்பரிய முறையில் திருமணம் நடந்தது, திருமணத்திற்காக ஹன்சிகா சிவப்பு நிற லெஹங்காவும், சோஹேல் தங்க நிறத்தில் ஷெர்வானியும் அணிந்திருந்தனர்.

அழகான புகைப்படம்
திருமண விழாவில் முக்கியமான சடங்கான நெற்றியில் குங்குமம் வைக்கும் சடங்கின் போது, மகிழ்ச்சியில் ஹன்சிகா ஆனந்த கண்ணீர் வடித்தார். இவர்களின் திருமணம் நடைபெறும் போது வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஹன்சிகாவும் சோஹேலும் கணவன் மனைவியாக திருமண பந்தத்தில் இணைந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

வெளிநாட்டுக்கு பறந்த ஹன்சிகா
இந்நிலையில், புதுமணத் தம்பதிகளான ஹன்சிகா மற்றும் சோஹேல் தங்களது ஹனிமூனைக் கொண்டாட வெள்ளிக்கிழமை ஆஸ்திரியாவுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பெல்வெடெரே அரண்மனை மற்றும் ரதாஸ்ப்ளாட்ஸ் சதுக்கத்திற்குச் சென்றுள்ளனர். கிறிஸ்மஸ் அலங்காரங்களால் ஜொலிக்கும் ஆஸ்திரிய தலைநகரில் இருந்து தனது கணவருடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டார்.

தீயாய் பரவும் புகைப்படம்
அந்த வீடியோவில், நடிகை ஹன்சிகா பெல்வெடெரே அரண்மனைக்கு முன் பிங்க் நிற டாப் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்து அழகாக இருக்கிறார். மேலும்,தனது கணவர் சோஹேல் கதுரியாவுடன் மகிழ்ச்சியாக கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளார். புதுமணத்தம்பதிகளான இவர்களின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் டிராண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











