விஜய்யை பயமுறுத்துறாங்களானு தெரியல.. ஆனால் முக்கியத்துவம் கொடுக்கறாங்கனு சொல்லுவேன் - நடிகை கஸ்தூரி!
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் அவருக்கு ஆதரவும் விமர்சனமும் பரவலாக இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி மற்றும் அவரது சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் குறித்து நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி உள்ளார். இவரது கட்சி சார்பில் இதுவரை இரண்டு மாநில மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது விஜய் மீது அரசியல் தளத்தில் முன்வைக்கப்படும் விமர்சனம் என்றால் அது, அவர் இதுவரை பேசிய மேடைகளில் கொள்கையாக அவர் எதுவுமே பேசவில்லை என்பதுதான். எல்லா மேடைகளிலும் சினிமா வசனங்களைப் போல பேசிக் கொண்டிருக்கிறார் என்று தொடர்ந்து விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.
இப்படி இருக்கையில் மற்ற கட்சிக்காரர்களுக்கு இல்லாத நெருக்கடி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கொடி கம்பம் நடுவதில் தொடங்கி, மாநாடு வரை காவல் துறையைக் கொண்டு நெருக்கடி ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் என்று தெரிவித்து வருகிறார்கள்.

கஸ்தூரி பேட்டி: இப்படி இருக்கையில் நடிகர் விஜய்யின் கட்சிக்கு திமுக நெருக்கடி கொடுக்கிறதா, பயமுறுத்தப் பார்க்கிறார்களா என்று நடிகை கஸ்தூரியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், " தமிழ்நாடு அரசு விஜய் கட்சியைப் பார்த்து பயப்படுகிறார்களா அல்லது பயமுறுத்துகிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அதை அவர்களிடத்தில் தான் கேட்க வேண்டும். ஆனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாடு அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது
விஜய் பதிவு: நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு அரசு, தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து பயப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவில், " தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.
வழக்கு: தேர்தல் தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகபூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளை கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என்.ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











