லட்சுமி மேனன் தலைமறைவு?.. ஐடி ஊழியரை அடித்த வழக்கில் போலீஸார் விசாரணை
சென்னை: தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒருவரைக் கடத்தித் தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் காவல்துறை விசாரணை நடத்தவுள்ளது. ஐடி ஊழியரை மது பாரில் வைத்து லட்சுமி மேனன் மற்றும் அவரது ஆட்கள் தாக்கியதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் விசாரணைக்காக லட்சுமி மேனனை போலீஸார் அணுக அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுபான பாரில் ஐடி ஊழியரை தாக்கிய வழக்கில் மிதுன், அனிஷ் மற்றும் சோனா மோல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்து லட்சுமி மேனன் கைது செய்யப்படுவோம் என்று நினைத்து தப்பித்து தலைமறைவாகி விட்டார் என்கின்றனர்.

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் லட்சுமி மேனன். சுந்தர பாண்டியன், மஞ்சப்பை கடைசியாக சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த லட்சுமி மேனன் சமீப காலமாக சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நிலையில், பாரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடியாட்களை ஏவி ஐடி ஊழியரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரில் நடிகை லட்சுமி மேனன் சண்டை: கடந்த சனிக்கிழமை இரவு எர்ணாகுளத்தில் உள்ள வெலாசிட்டி பாரில் நடிகை லட்சுமி மேனன் தனது நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என ஜமாய்த்துக் கொண்டிருந்த நிலையில், அங்கே ஐடி ஊழியர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் இருந்து அந்த ஐடி ஊழியர் தப்பித்துச் செல்ல காரில் ஏறிய போது லட்சுமி மேனன் மற்றும் அவரது கேங் அந்த நபரை தடுத்து நிறுத்தி அடிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐடி ஊழியர் புகார்: தன்னை லட்சுமி மேனன் மற்றும் அவரது கேங் கூட்டமாக தாக்கியதாக எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் அந்த ஐடி ஊழியர் புகார் அளித்த நிலையில், ஆதாரங்களை விசாரித்த போலீசார் லட்சுமி மேனன் மற்றும் அவரது கூட்டாளிகளான மிதுன், அனிஷ் மற்றும் சோனா மோல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
லட்சுமி மேனன் தலைமறைவு: ஆனால், நடிகை லட்சுமி மேனனை விசாரணைக்காக அழைக்க நினைத்த போலீசார் எவ்வளவு முயற்சித்தும் அவர் இன்னும் சிக்கவில்லை என்றும் இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே லட்சுமி மேனன் காவல் நிலையத்துக்கு வந்து தனது விளக்கத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











