சமந்தாவுக்கு இரண்டு வருசமாக படங்களே இல்லை.. எப்படி சமாளிக்கிறார்? மனதளவில் எப்படி இருக்கிறார்?
சென்னை: நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது நடிப்புத் திறமையால் திரையுலகில் உயர்ந்தவர். தனது சொந்த வாழ்க்கையில் பல்வேறு சறுக்கல்களை அவர் எதிர்கொண்டாலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் அவர் தனது மனநிலை தற்போது எப்படி உள்ளது என்பது குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக உள்ள சமந்தா குறித்து எப்போது பேசினாலும் அவரது காதல் திருமணம் மற்றும் விவாகரத்து பேசுவதை தவிர்ப்பது என்பது முடியாத ஒன்று. காரணம் அவரது விவகாரத்திற்குப் பின்னர் அவரது வாழ்க்கையில் பெரும்பாலும் நடந்தது சோதனைகள்தான். நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, சமந்தா தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழிலும் அதிகம் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் பாலிவுட்டில் தீவிரமாக கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் கடைசியாக, 'சிட்டாடெல்: ஹனி பன்னி' என்ற ஆக்ஷன் த்ரில்லர் வெப் சீரீஸ் வெளியானது.

விவாகரத்துக்குப் பின்னர் மயோசிடிஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, சமந்தா ஒரு வருடத்திற்கு மேலாக படப்பிடிப்புகளில் இருந்து விலகி இருந்தார். அவர் கடைசியாக நடித்த படம் 'குஷி'. தமிழ்நாட்டில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்டபோது கூட நடிகைமீது ரசிகர்கள் எவ்வளவு அன்பு வைத்துள்ளார்கள் என்பதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு நன்றி கூறினார். சமீபத்தில் மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ள சமந்தா, தனது படங்கள் மற்றும் வாழ்க்கை குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் 52வது தேசிய மேலாண்மை மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
மனம் திறந்த சமந்தா: மயோசிடிஸ் நோய் தனது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது குறித்து அவர் பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. "முன்பு நடிகைகள் ஒரு வருடத்திற்கு 5 படங்களில் நடித்திருப்பார்கள். அந்த படங்கள் வெற்றி பெற்றால், அவர்கள் முன்னணி நட்சத்திரங்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள், பன்னாட்டு பிராண்டுகளின் விளம்பர தூதுவர்களாகவும் மாறுவார்கள்.

இரண்டு ஆண்டுகளாக படம் இல்லை: ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக என் படம் எதுவும் வெளியாகவில்லை. நான் முன்னணி நட்சத்திரங்கள் பட்டியலில் இல்லை, என்னிடம் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள படங்களும் இல்லை. ஆனால், நான் முன்னெப்போதையும் விட மகிழ்ச்சியாக இருக்கிறேன். முன்பு நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவேன். ஆனால் இப்போது அந்தப் பிரச்சனை இல்லை. இப்போது எனக்கு 38 வயதாகிறது. வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்ற பயம் இந்த ஒரு வருட காலமாக என்னிடத்தில் இல்லை" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சும் விளக்கமும் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. பலரும் சமந்தா விரைவில் படங்களில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். தற்போது சமந்தா, 'மா இன்டி பங்காரம்' மற்றும் 'ரக்த் பிரமண்ட்: பிளடி கிங்டம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











