»   »  தமிழில் நடிக்க ஆசை - ஐஸ்வர்யா

தமிழில் நடிக்க ஆசை - ஐஸ்வர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Aishwarya Rai
தமிழ்ப் படங்களில் நடிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அதற்குரிய நேரம் இல்லாததால், நடிக்க முடியாத நிலை இருப்பதாக ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

அபிஷேக் பச்சனை கைப் பிடித்த பிறகு முதல் முறையாக சென்னைக்கு வந்திருந்தார் ஐஸ்வர்யா. நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த வைர நகை கலெக்ஷ்னை வெளியிட வந்திருந்த ஐஸ்வர்யா பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மனம் திறந்து பேசிய ஐஸ்வர்யா, தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். ஐஸ்வர்யா கூறுகையில், எனக்குத் தமிழ்ப் படங்களை ரொம்ப பிடிக்கும். தமிழ்ப் படங்களில் நடிக்கவும் ஆசையாக உள்ளது. ஆனால் நேரம்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது. பிற பணிகளில் பிசியாக இருப்பதால் தமிழுக்கு என்னால் கால்ஷீட் தர முடியவில்லை.

ஆனால் நேரம் கிடைத்தால், காலம் கனிந்தால் நிச்சயம் தமிழ்ப் படங்களில் நடிப்பேன் என்றார் ஐஸ்வர்யா.

சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கேரக்டரிலும், சிவாஜி படத்தில் ஷ்ரியா நடிப்பதாக இருந்த கேரக்டரில் ஐஸ்வர்யாவைத்தான் நடிக்க வைக்க முதலில் முயன்றனர். ஆனால் கடைசி வரை அவரது கால்ஷீட் கிடைக்கவே இல்லை. இதனால்தான் ஜோதிகாவும், ஷ்ரியாவும் நடித்தனர் என்பது நினைவிருக்கலாம்.

தமிழ்ப் பட அனுபவம் குறித்து ஐஸ்வர்யா கூறுகையில், இருவர் படம் எனக்கு நடிப்பு குறித்த நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. எப்படி வசனத்தைப் பேச வேண்டும், எப்படி உணர்ச்சிகளைக் காட்ட வேண்டும் என்பதை அப்படம் எனக்குக் கற்றுக் கொடுத்தது.

மாடலிங்கில் இருந்து வந்த நான் நேரடியாக நசிக்க வந்த படம் இருவர்தான். எனவே இருவர்தான் எனக்கு முதலில் நடிப்பைச் சொல்லிக் கொடுத்த படம்.

மேலும், தமிழ்நாட்டுக்கும் எனக்கும் இடையிலான உறவுக்கு அடித்தளம் அமைத்ததும் இருவர் படம்தான். இதன் மூலம்தான் நான் நடிப்பில் உயர முடிந்தது.

தமிழ்க் கலாச்சாரம் மிகச் சிறப்பானது. தமிழ்க் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் இந்தியப் பெண்ணாக இருப்பதிலும் பெருமைப்படுகிறேன். ஜீன்ஸ் படத்திற்குப் பிறகு என்னை தமிழ் மக்கள் ஐஸ் என்றே செல்லமாக கூப்பிட ஆரம்பித்தனர். அதுதான் முதல் முறையாக என்னைச் செல்லப் பெயரிட்டுக் கூப்பிட வைத்த படம். அது எனக்கு ெபருமையான விஷயம்.

வடக்கில் எல்லாம் என்னை ஆஷ் என்றுதான் கூப்பிடுகிறார்கள். ஆனால் தமிழக மக்கள்தான் என்னை ஐஸ் என்று கூப்பிட்டவர்கள். ஆஷ் என்பதை விட ஐஸ் நன்றாக இருக்கிறது என்றார் ஐஸ்வர்யா.

அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, இப்போது எனக்குக் கிடைத்துள்ள வாழ்க்கையை நான் நன்றாக அனுபவித்து வருகிறேன். வேறு எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை என்றார் ஐஸ்.

திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு, மிகச் சிறப்பான வாழ்க்கையை கொடுத்ததற்காக கடவுளுக்கு நான் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். மிகவும் சிறப்பான திருமண வாழ்க்கை எனக்குக் கிடைத்துள்ளது என்றார்.

குரு படத்திற்காக சென்னைக்கு வந்து தங்கியிருந்த அனுபவம் குறித்த கேள்விக்கு, குரு படத்திற்காக சென்னையில் தங்கியிருந்ததை மறக்க முடியாது. குரு பட யூனிட்டார் மிகவும் சிறப்பாக ஒத்துழைத்தனர். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது என்றார்.

எல்லாக் கேள்விகளுக்கும் படு கேஷுவலாக பதிலளித்த ஐஸ்வர்யா, வைர நகைகள் மீது ஏன் பெண்களுக்கு அதிக பற்று உள்ளது என்ற கேள்விக்கு, ஆண்களுக்கு எப்படி புதுப் புதுக் கார்கள் மீது ஆசை பிறக்கிறதோ அது போலத்தான் என்றார் 'நச்'சென்று.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil