»   »  மீண்டும் சூர்யாவுடன் ஆசின்

மீண்டும் சூர்யாவுடன் ஆசின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கஜினியில் கலக்கிய சூர்யாவும், ஆசினும் மீண்டும் இணைகிறார்கள் ஹரியின் வேல் மூலமாக.

மல்லு, டோலி, கோலி என தென்னிந்திய சினிமாவைக் கலக்கி வந்த ஆசின், இப்போது பாலிக்கு மாறியுள்ளார். மாறிய கையோடு இனி தென்னிந்தியாவை மறந்து விடுவாரோ என்று சகல சனங்களும் கலகலத்துக் கிடக்கும் நிலையில், தமிழில் புதிய படம் ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளார் ஆசின்.

கஜினியின் இந்தி ரீமேக்கில் பிசியாகியுள்ளார் ஆசின். ஆமீர்கானுடன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் மூலம் இந்தியிலும் பின்னி எடுத்து பிசின் போட்டு கம்மென்று உட்கார்ந்து விடும் எண்ணம் உள்ளது ஆசினிடம்.

கஜினி தவிர, போக்கிரியின் இந்தி ரீமேக்கிலும் சல்மான் கானுடன் நடிக்கத் தயாராகி வருகிறார் ஆசின். இதுதவிர இன்னொறு இந்திப் படமும் பேச்சுவார்த்தையில் உள்ளதாம்.

இந்த நிலையில்தான் தமிழில் ஒரு புதுப் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ஆசின். அது சூர்யாவுக்கு ஜோடியாக, ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள வேல்.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்தார் ஆசின். ஆனால் திடீரென ஹரிக்கு, ஆசின் மீது ஈர்ப்பு குறைந்துள்ளது. காரணம், ஆசினை சூர்யாவுக்கு ஜோடியாக போட ஜோதிகா காட்டிய எதிர்ப்புதான்.

இதையடுத்து இந்தியில் வந்த வாய்ப்பை பிடித்துக் கொண்டு அங்கு பாய்ந்தார் ஆசின். இந்த நிலையில் ஜோதிகாவை சமாதானப்படுத்திய சூர்யா, ஹரியைப் பிடித்து ஆசினை புக் செய்யுமாறு கோரினார்.

இதையடுத்து ஹரியும், சூர்யாவும் சேர்ந்து ஆசினிடம் போனில் பேசினர். வேல் படம் குறித்து விவாதித்தனர். உடனடியாக ஓ.கே. சொன்ன ஆசின், கால்ஷீட்டுகளையும் அள்ளிக் கொடுத்துள்ளாராம்.

கஜினியின் இந்தி ரீமேக்கின் பெரும் பகுதியை முருகதாஸ், சென்னையில் வைத்து சுடவுள்ளாராம். இதனால் மும்பை சென்றிருந்த ஆசின் கடந்த வாரம் சென்னை திரும்பினார். இந்தி கஜினிக்கு கொடுத்த கால்ஷீட் போக இடையில் கிடைக்கும் நாட்களை வேல் படத்துக்குக் கொடுத்துள்ளாராம் ஆசின். எனவே ஒரே நேரத்தில் இரு படங்களிலும் நடிக்கவுள்ளார்.

வேல் படம் குறித்து ஹரி கூறுகையில், திட்டமிட்டபடி வேல் தொடங்கும். ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தின் நாயகி ஆசின்தான். ஜோதிகா எதிர்த்ததால் அவரை நாங்கள் மாற்ற திட்டமிட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. ஆசின்தான் நாயகி.

படத்தின் பெரும்பகுதியை, சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களிலேயே படமாக்க முடிவு செய்துள்ளேன் என்றார் ஹரி.

வேல் விளையாட்டு தொடங்கட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil