»   »  ஆசின் டேட்ஸ் படு டைட்!

ஆசின் டேட்ஸ் படு டைட்!

Subscribe to Oneindia Tamil

ஆசின் கால்ஷீட் வேண்டுமானால் 2 ஆண்டுகளுக்குக் காத்திருக்க வேண்டுமாம். அந்த அளவுக்கு அவரது கால்ஷீட் டைரி படு டைட்டாகியிருக்கிறதாம்.

மல்லுவுட்டிலிருந்து டோலிவுட்டுக்குப் போய் அங்கிருந்து கோலிவுட்டுக்கு வந்து, இப்போது பாலிவுட்டுக்குப் பாய்ந்துள்ள ஆசினின் மார்க்கெட் படு உச்சத்தில் இருக்கிறது.

ஆசினின் நடிப்பு பாணி, அவரது டான்ஸ் ஸ்டைல், மேனரிசம் என எல்லாமே பிற நடிகைகளிடமிருந்து அவரை தனிப்படுத்தி காட்டியதால் ஆசின் படு வேகமாக உச்சத்திற்கு வந்து விட்டார்.

தமிழைக் கலக்கி வந்த ஆசின் இப்போது இந்தியிலும் அலையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளார். இந்தி கஜினியில் நடித்து வரும் ஆசின், முதலில் ஆமிர்கானைக் கவர்ந்தார். இப்போது பட யூனிட்டே ஆசின் புகழ் பாடி வருகிறதாம்.

ஆசினிடம் தற்போது இந்தியில் 3 படங்களும், தமிழில் 2 படங்களும் உள்ளன. மலையாளத்தில் சுத்தமாக இப்போது அவர் நடிப்பதில்லை. அவர் கேட்கும் பெரிய சம்பளத்தால், மலையாளப் படத் தயாரிப்பாளர்கள் யாரும் ஆசின் வீட்டுப் பக்கமே வருவதில்லையாம். ஆசின் தற்போது ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை வைத்து ஒரு மலையாளப் படத்தை எடுத்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பைக்கு ஷிப்ட் ஆகியுள்ள ஆசின், இப்போதைக்கு இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் அஜீத் நடிக்கும் படத்துக்காக ஆசினை அணுகியுள்ளார். ஆனால் அவரோ கால்ஷீட் ஃபுல் என்று கூறி விட்டாராம். இதையடுத்து ஷ்ரியாவை புக் செய்துள்ளாராம் அந்த தயாரிப்பாளர்.

தற்போது தமிழில் கமலுடன் நடித்து வரும் தசாவதாரம், சூர்யாவுடன் நடித்து வரும் வேல் ஆகிய படங்களை முடித்து விட்டு நிரந்தரமாக மும்பையில் செட்டிலாகவுள்ளார் ஆசின்.

தமிழ் வேண்டாம் என்று சொல்லீட்டீங்களாமே என்று ஆசினைப் பிடித்து கவலையோடு கேட்டோம். அதற்கு அவர், ஹய்யா, இந்தக் கேள்வியைக் கேட்கும் 100வது நபர் நீங்கள். நான் எப்படி தமிழை மறக்க முடியும்?

எனக்கு மொழி, சம்பளம் பற்றிக் கவலை இல்லை. நடிப்புதான் முக்கியம். கதைக்கும், எனது கேரக்டருக்கும்தான் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

தற்போது இந்தியில் ஒத்துக் கொண்டுள்ள படங்களை முடித்து விட்டு தமிழில் மீண்டும் நடிப்பேன். என்னிடம் உள்ள இந்திப் படங்களைப் பார்த்தால் 2008க்குப் பிறகுதான் நான் ஃப்ரீ ஆவேன் என்று தெரிகிறது என்றார் ஆசின்.

ஸோ, ஆசினை வைத்து தமிழ்ப் படம் எடுக்க விரும்புவோர் தயவு செய்து 2 வருடங்களுக்குப் பிறகு முயற்சிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil