»   »  கமல் தயாரிப்பில் ரஜினி - ஜோடி ஆசின்?

கமல் தயாரிப்பில் ரஜினி - ஜோடி ஆசின்?

Subscribe to Oneindia Tamil


கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினி நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆசின் நடிக்கப் போவதாக கோலிவுட்டில் புதுத் தகவல் கிளம்பியுள்ளது.

ரஜினியும், கமலும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஒரே உறையில் இரு கத்திகள் வேண்டாம் என்று அவர்களாகவே பிரிந்து, தங்களது தனித் திறமையால் இரு பெரும் இமயங்களாக உயர்ந்து, இன்று இளம் கலைஞர்களுக்கு ஆதர்ச நாயகர்களாக இருக்கிறார்கள்.

இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் இருவரும் சேர்ந்து இரு வேறு துறையில், ஆனால் ஒரே படத்தில் இணையவுள்ளனர். அதாவது கமல்ஹாசன் தயாரிக்க, அதில் ரஜினி நடிக்கவுள்ளார். இதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாக்.

இதுதொடர்பாக ரஜினியும், கமலும் சில முறை சந்தித்துப் பேசியுள்ளனராம். இதில் கதை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போவது ஆசின் என்கிறார்கள். ரஜினியின் இந்தப் படத்தில் இணைய திரிஷா உள்ளிட்ட பலரும் முண்டியடித்துள்ளனர். ஆனால் ஆசின் பக்கமே அதிர்ஷ்டக் காற்று வீசுவதாக தெரிகிறது.

ரஜினி தரப்பிலிருந்தும் ஆசினுக்கு பாசிட்டிவ்வான சிக்னல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆசின் தரப்பு படு சந்தோஷமாக உள்ளதாம்.

கமலுடன் தற்போது நடித்து வரும் தசாவதாரம் மற்றும் ஆமிர்கானுடன் நடித்து வரும் கஜினி, சூர்யாவுடன் நடித்து வரும் வேல் ஆகிய படங்களை முடித்து விட்டு ரஜினி படத்துக்கு ஆசின் வருவார் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப புதிய படங்ளை ஒப்புக் கொள்ளாமல் கால்ஷீட்டுகளை ஃப்ரீயாக்கி வருகிறாராம் ஆசின்.

தொழிலில் அவர் காட்டும் ஆர்வம், நடிப்புத் திறமை, அனைவரையும் கவரும் க்யூட் அழகு என பல பாசிட்டிவ்வான விஷயங்கள்தான் ஆசினை ரஜினியின் ஜோடியாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கமல், ரஜினி இருவரும் நீண்ட காலத்திற்குப் பிறகு இணைவதால் இந்தப் படத்தை மிகப் பெரிய இயக்குநர் ஒருவர்தான் இயக்குவார் எனக் கூறப்படுகிறது. மேலும் படத்தின் பட்ஜெட்டும் மகா பட்ஜெட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிவாஜி 100 நாட்களை நெருங்கியுள்ளது. 100 வது நாள் விழாவை வெற்றிகரமாக கொண்டாடிய பின்னர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் புதிய பட அறிவிப்பு வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.

ரஜினி படமே அறுசுவை விருந்தாக இருக்கும். இதில் கமலும், ஆசினும் இணைந்தால் அது நிச்சயம் இன்சுவை விருந்துதான்!

Read more about: asin, kamal, rajini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil