»   »  சென்னைக்கு ஆசின் குட்பை!

சென்னைக்கு ஆசின் குட்பை!

Subscribe to Oneindia Tamil
Asin

ஒரு வழியாக இத்தனை காலம் குடித்தனம் நடத்தி வந்த சென்னையை விட்டு மும்பைக்கு இடம் பெயர்ந்து விட்டார் ஆசின்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த அழகு தேவதை ஆசின். சென்னையில் முதலில் ஹோட்டலில் தங்கி நடித்து வந்தார். தமிழில் நம்பர் ஒன் நடிகையாக மாறிய பின்னர் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் ஒரு பிளாட்டை வாங்கி குடியேறினார்.

அவ்வளவு பெரிய பிளாட்டில் அவர் மட்டும் தங்கி நடித்து வந்தார். இந்த நிலையில் இந்தியில் நடிக்கும் வாய்ப்பு ஆசினைத் தேடி வந்தது. கஜினி படத்தின் இந்தி ரீமேக்குக்காக மும்பைக்கு நடிக்கப் போன ஆசினைத் தேடி மேலும் பல இந்தி வாய்ப்புகள் வந்தன

இதையடுத்து நிரந்தரமாக மும்பையில் தங்க தீர்மானித்தார் ஆசின். இதன் காரணமாக அங்குள்ள அந்தேரி, ஜூஹு காம்ப்ளக்ஸில் உள்ள லோகந்த்வாலா பகுதியில் புதிய வீட்டையும் வாங்கினார்.

மேலும், இப்போதைக்கு தமிழுக்கு பிரேக் விட்டு விட்டு இந்தியிலேயே தொடர்ந்து நடிக்கவும் தீர்மானித்தார். இருந்தாலும் உடனடியாக அங்கு குடி போவதா அல்லது சென்னையில் கொஞ்ச காலம் இருக்கலாமா என்ற 'டைலமா'வில் இருந்து வந்தார் ஆசின்.

இப்போது மும்பைக்கே போய் விட முடிவு செய்து விட்ட ஆசின், கடந்த வாரம் தனது சென்னை பிளாட்டை காலி செய்து விட்டு மும்பைக்குப் போய் விட்டார்.

தற்போது தமிழில் அவர் வசம் புதுப் படம் எதுவும் இல்லை. கமலுடன் நடித்துள்ள தசாவதாரம் படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து விட்டது.

இந்த ஆண்டு ஆசின் நடித்த மூன்று படங்கள் வெளியாகின. அஜீத்துன் ஆழ்வார், விஜய்யுடன் போக்கிரி, சூர்யாவுடன் வேல் ஆகிய படங்களே அவை.

தற்போது இந்தியில் அமிதாப் பச்சனின் மகளாக நடிக்கும் புதிய படம், ஷாஹித் கபூருடன் ஒரு படம் என ஆசினைத் தேடி இரு இந்திப் படங்கள் வந்துள்ளன. இதுதவிர மேலும் சில படங்களும் வந்துள்ளனவாம்.

இருந்தாலும், கஜினி ரிலீஸான பின்னரே புதிய இந்திப் படங்களை அவர் ஒப்புக் கொள்ளவுள்ளாராம். அதுவரை வெயிட் கரோஜி என்று இந்தி தயாரிப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளாராம்.

Please Wait while comments are loading...