ஷாருக்கான் பட வாய்ப்பை தூக்கி எறிந்த சமந்தா... காரணம் இது தானா ?
சென்னை : சமந்தா அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். தற்போது இரு மொழிகளில் தயாராகும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சமந்தா. இவர் நடித்துள்ள சாகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் டோலிவுட்டின் ஃபேவரைட் காதல் தம்பதியாக இருந்த சமந்தா - நாக சைதன்யா ஜோடி அக்டோபர் 2 ம் தேதி, தாங்கள் பிரிய போவதை சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். ஜுலை மாதம் முதலே இவர்களின் விவாகரத்து பற்றிய வதந்திகள் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வந்தன.
இருவரும் பிரிவை அறிவித்த பிறகும், சமந்தா பற்றி பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான், குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு நாக சைதன்யாவின் குடும்பத்தினர் கூறியதாகவும். அதற்கு சமந்தா மறுத்து விட்டதாகவும், அதனால் தான் சமந்தாவை விவாகரத்து செய்ய நாக சைதன்யா முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது.
சமந்தா கருக்கலைப்பு செய்து விட்டார் அதனால் தான் நாக சைதன்யா, சமந்தாவை பிரிய முடிவு எடுத்ததாகவும், இவர்களை சமாதானம் செய்து வைக்க நாகர்ஜுனா குடும்பத்தினர் பெரிதும் முயற்சி செய்தும் அது முடியாமல் போனதாகவும் கூறப்பட்டது.
சமந்தாவை குறிவைத்து பரப்பப்படும் இந்த வதந்தியை சாகுந்தலம் படத்தின் தயாரிப்பாளர் நீலிமா குணா திட்டவட்டமாக மறுத்தார். அவர் கூறுகையில், குழந்தை பெற்றுக் கொண்டு செட்டில் ஆகவே சமந்தா விரும்பினார். அதனால் தான் சாகுந்தலம் படத்தின் ஷுட்டிங்கை கூட சீக்கிரம் முடிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆண்டு கூட சாகுந்தலம் படத்தில் நடிப்பதற்காக நானும் எனது அப்பா டைரக்டர் குணசேகரும் அவரிடம் பேசிய போது, அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தார். அப்போது கூட, இந்த ரோலில் நடிக்க நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஷுட்டிங்கை அதிகபட்சம் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தான் குடும்ப வாழ்க்கையை வாழ திட்டமிட்டிருப்பதாகவும், தான் தாயாக ஆசைப்படுவதாகவும், அதையே தான் முக்கியமாக நினைப்பதாகவும் கூறினார் என்றார்.
லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், சாகுந்தலம் படத்தை முடித்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதற்காக சமந்தா நடிக்க மறுத்த பல படங்களில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கி வரும் லைன் படமும் ஒன்றாம். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க முதலில் சமந்தாவிடம் தான் அட்லீ கேட்டாராம். ஆனால் தான் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவில் இருப்பதால் அதில் நடிக்க மறுத்து விட்டாராம்.
அதற்கு பிறகு லீட் ரோலில் நடிக்க நயன்தாராவிடம் கேட்கப்பட்டதாம். தற்போது லைன் படத்தின் ஷுட்டிங்கில் நயன்தாரா கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஆனால் ஷாருக்கான் படத்தில் நடிக்க மறுத்தது பற்றி அட்லீ தரப்பிலோ அல்லது சமந்தா தரப்பிலோ இதுவரை எந்த தகவலும் கூறப்படவில்லை.


Click it and Unblock the Notifications











