Ghaati Day 3 Box Office: அடிவாங்கிய அனுஷ்கா படம்.. காட்டி 3வது நாள் வசூல் இவ்வளவு தானா?
ஹைதராபாத்: பான் இந்தியா நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்த 'காட்டி' திரைப்படம் செப்டம்பர் 5 அன்று தெலுங்கு மற்றும் தமிழில் பிரம்மாண்டமாக வெளியானது. கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ள இப்படத்தை ஃபர்ஸ்ட் ஃப்ரேம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரின் கீழ் ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி தயாரித்துள்ளனர்.
இந்த க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் படமான 'காட்டி'யின் பட்ஜெட், வெளியீட்டுக்கு முந்தைய வணிகம், லாப இலக்குகள் மற்றும் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பான் இந்தியா நடிகையான அனுஷ்கா ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும், பிரபல இயக்குநர் கிரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளதும் படத்திற்கான முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் சிவாஜி கணேசனின் பேரனான விக்ரம் பிரபு கதாநாயகனாகவும், ஜகபதி பாபு, சைதன்யா ராவ் மடாடி ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மூத்த தொழில்நுட்ப கலைஞர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளனர். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம், படத் தயாரிப்புச் செலவுகள், விளம்பரச் செலவுகள் உள்ளிட்டவை சேர்த்து படத்தின் மொத்த முதலீடு சுமார் ₹50 கோடியாக இருக்கலாம் என வர்த்தக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
காட்டி படத்தின் லாப இலக்கு (Break-even target) மிக அதிகமாக உள்ளது. படம் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் சற்று குறைவாகவே உள்ளது. படம் லாபம் ஈட்ட ₹55 கோடி இந்திய ஷேர் மற்றும் ₹100 கோடி மொத்த வசூலை ஈட்ட வேண்டும் என வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'காட்டி' திரைப்படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல் நாள் இந்தியளவில் ₹2 கோடி வசூலை ஈட்டியது. இரண்டாம் நாளில் ₹1.74 கோடி வசூல் மட்டுமே ஈட்டியுள்ளது.
முதல் இரண்டு நாட்களில் ₹3.74 கோடி மொத்த வசூலை ஈட்டியுள்ளது. உலகளவில் ₹10 கோடி வரை வசூலித்திருக்கலாம் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 7 அன்று, மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை, வசூல் மேலும் குறைந்துள்ளது.
மூன்றாவது நாளில், மாலை 6 மணி வரை, இந்தியாவில் ₹55 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது என சாக்னிக் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. மீதமுள்ள காட்சிகளின் வசூலையும் சேர்த்து, மூன்றாவது நாளில் ₹1.15 கோடி ர வசூல் மட்டுமே வந்துள்ளது என சாக்னிக் வெப்சைட் தெரிவித்துள்ளது. மூன்றாவது நாளில் திரையரங்கு ஆக்கிரமிப்பு வெறும் 15% மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஒட்டுமொத்தமாக இந்தியளவில் அனுஷ்கா நடித்த காட்டி திரைப்படம் முதல் 3 நாட்களில் 4.89 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உலகளவில் 12 கோடி வரை வசூல் வந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் படத்தின் ரிசல்ட்டை பார்த்து பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறுகின்றனர்.
பிரபாஸின் சலார் படம் போல பாக்ஸ் ஆபீஸில் அனுஷ்காவின் ஆக்ரோஷமான காட்டி படம் தெறிக்கவிடும் என பார்த்த ரசிகர்களுக்கு, கல்யாணி பிரியதர்ஷனின் லோகா அளவுக்கு கூட இல்லாமல், புது நடிகர்கள் படங்களுக்கு வரும் வசூல் மட்டுமே வந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











