சிறு வயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்...பகீர் கிளப்பிய கங்கனா ரணாவத்
மும்பை: சிறு வயதிலேயே தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக நடிகை கங்கனா ரணாவத், டிவி ரியாலிட்டி ஷோவில் வெளியிப்படையாக பேசி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்ச்சையான கருத்துக்கள், பேச்சுகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர் கங்கனா. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைக்கு பெயர் போனவர் ஆகி விட்டார். நடிகர் ஹிருத்திக் ரோஷன் விஷயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய கங்கனா, சோஷியல் மீடியாவிலும் தனது வேலையை ஆரம்பித்தார்.

சர்ச்சை ஷோவில் கங்கனா
கங்கனாவின் தொடர் சர்ச்சை பேச்சுக்கள் காரணமாக அவரின் கணக்கை முடக்கியது ட்விட்டர் இந்தியா நிறுவனம். பிறகு இன்ஸ்டாகிராமில் சில கருத்துக்களை பதிவிட்டு வந்தார். சமீப காலமாக சோஷியல் மீடியாவை விட்டு விட்டு, டிவி பக்கம் வந்துள்ளார். லாக் அப் என்ற ரியாலிட்டி ஷோ ஒன்றை கங்கனா நடத்தி வருகிறார். ஏக்தா கபூர் நிறுவனம் தயாரிக்கும் இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 3 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

விரைவில் லாக் அப் ஃபினாலே
டாஸ்க், சண்டைகள், உணர்வுகள் என அனைத்தும் கலந்ததாக இருக்கும் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் பல சர்ச்சைகளை சந்தித்து வந்தது. விரைவில் இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ளது. ஃபினாலே நெருங்குவதால் ரசிகர்களை எப்படியாவது என்டர்டைன் செய்து கோப்பையை வெல்ல வேண்டும் என போட்டியாளர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்
இந்நிலையில் சமீபத்திய எபிசோட் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளரான கங்கனா சிறைக்குள் சென்று, போட்டியாளர்களுடன் பேசினார். அப்போது சிறு வயதிலேயே தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அதுவும் இந்த சம்பவம் தனது சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்திலேயே நடந்ததாகவும் கூறினார் கங்கனா. தொடர்ந்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசிய அவர், குட் டச், பேட் டச் பற்றியும் பேசினார்.

எல்லோருக்கும் நடந்திருக்கு
முனாவர் ஃபரூக்கி தான் எப்படி 6 அல்லது 7 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என்பது பற்றி கூறினார். அதற்கு பதிலளித்த கங்கனா, நீங்கள் மட்டுமில்லை ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இது பற்றி பொது வெளியில் யாரும் பேசுவது கிடையாது. குழந்தை பருவத்தில் எல்லோரும் இதை அனுபவித்திருக்கிறார்கள். இதை நான் உட்பட பலரும் அனுபவித்திருக்கிறார்கள்.

பகீர் கிளப்பிய கங்கனா
எனது ஊரில் நான் சிறு வயதாக இருக்கும் போது என்னை விட சில வயது மூத்த சிறுவன் ஒருவன் என்னை தகாத முறையில் தொடுவதை வழக்கமாக வைத்திருந்தான். ஆனால் அப்போது அதற்கு அர்த்தம் எனக்கு புரியவில்லை. ஒவ்வொரு குழந்தையும் தங்கள் குடும்பம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் அதை கடந்து வெளி சென்று தான் ஆக வேண்டும். குட் டச், பேட் டச் என்னவென்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











