30 ஆயிரம் கோடி சொத்து தகராறு.. இந்திய குடியுரிமையே விட்டு விட முடிவு செய்தாரா கரிஷ்மா கபூர்?
மும்பை: கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூரின் மறைவுக்குப் பிறகு, அவரது ரூ. 30,000 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்காக குடும்ப உறுப்பினர்களிடையே தகராறு நடந்து வருகிறது. இந்த நிலையில், சஞ்சய் கபூரின் மூன்றாவது மனைவி பிரியா சச்தேவ் கபூர், கரிஷ்மா கபூரின் குழந்தைகள் சமைரா மற்றும் கியான் ஆகியோரை உயிலில் இருந்து நீக்கியதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சஞ்சய் கபூர் தனது இரு குழந்தைகளுடன் கரிஷ்மா கபூருக்கும் போர்ச்சுகீசிய குடியுரிமை பெற உதவியதாகக் கூறுகிறது. இது சஞ்சய் கபூரின் சொத்து வழக்கில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸ்18 அறிக்கையின்படி, சஞ்சய் கபூர் மற்றும் கரிஷ்மா கபூர் இடையேயான வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம், சஞ்சய் கபூர் தனது மறைவுக்கு முன், கரிஷ்மா கபூர் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் போர்ச்சுகீசிய குடியுரிமை பெற உதவினார் என்பது தெரியவந்துள்ளது. குடும்பத்திற்கான வெளிநாட்டு குடியுரிமையைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
ஒரு உரையாடலில், சஞ்சய் கபூர், போர்ச்சுகீசிய பாஸ்போர்ட்டைப் பெற கரிஷ்மா கபூர் தனது இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில் இந்தியா இரட்டை குடியுரிமையை அனுமதிப்பதில்லை. இந்த வழக்கில் நீதிமன்றம் இந்த ஆதாரங்களை ஆய்வு செய்யும்.
புதன்கிழமை, டெல்லி உயர் நீதிமன்றம் கரிஷ்மா கபூர் மற்றும் அவரது இரு குழந்தைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் தங்கள் மறைந்த தந்தை சஞ்சய் கபூரின் ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு கோரியுள்ளனர்.
நீதிபதி ஜோதி சிங் தலைமையிலான அமர்வு, எதிர்மனுதாரர்கள் இரண்டு வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வ அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவும், அதற்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் மறுப்புகளைச் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கில் அடுத்த விசாரணை அக்டோபர் 9 அன்று நடைபெற உள்ளது.
சஞ்சய் கபூர் தனது உயில் மூலம் தனது குழந்தைகளுக்கு ரூ. 1900 கோடி மதிப்பிலான சொத்துக்களை வழங்கியிருந்தார். ஆனால், பிரியா கபூர் சஞ்சய் கபூரின் உயிலை மாற்றி, அவரது சொத்துக்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சிப்பதாக கரிஷ்மா கபூரின் குழந்தைகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சஞ்சய் கபூரின் தாயார் ராணி கபூரும் தனது சொத்துப் பங்கிற்காக நீதிமன்றத்தில் போராடி வருகிறார். நடிகை கரிஷ்மா கபூரின் மறைந்த கணவர் சஞ்சய் கபூரின் 30 ஆயிரம் கோடி சொத்து விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











