»   »  லிடியா ஜேக்கப் என்ற கார்த்திகா

லிடியா ஜேக்கப் என்ற கார்த்திகா

Subscribe to Oneindia Tamil

ஒரே நேரத்தில் முப்பெரும் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருப்பதால் படா சந்தோஷத்தில் இருக்கிறார் லிட்டு என்கிற லிடியா ஜேக்கப் என்கிற கார்த்திகா.

கலகலப்பான நாயகிகளை பரபரப்பாக தந்து கொண்டிருக்கிற கேரளத்திலிருந்து வந்துள்ள அழகு முகம்தான் கார்த்திகா. சேச்சியின் ஒரிஜினல் பெயர் லிடியாவாம். வீட்டிலும், நட்பு வட்டாரத்திலும் செல்லமாக லிட்டு என்று அழைக்கப்படுகிறார். சினிமாவுக்காக கார்த்திகா என்று பெயர் மாற்றிக் கொண்டாராம்.

கார்த்திகா முதலில் நடிக்க வந்தது தமிழில் புலன் விசாரணை பார்ட் 2 படத்தில்தான். அதில் பிரஷாந்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்போது பிரஷாந்த் கிரகலட்சுமி விவகாரமாக பிசியாக இருப்பதால் படப்பிடிப்பு தடைபட்டு நிற்கிறதாம்.

இந்த நிலையில்தான் சரத்குமாரின் நம்நாடு படத்தில் ஜோடி சேரும் வாய்ப்பு ஓடி வந்துள்ளது. உடனே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டாராம். அதேபோல மலையாளத்தில் சுரேஷ் கோபியுடன் பிளாக் கேட்ஸ் என்ற படத்தில் நடிக்கிறாராம்.

இப்படி ஒரே நேரத்தில் முப்பெரும் ஹீரோக்களுடன் நடிப்பதால் படு சந்தோஷமாக இருக்கிறார் கார்த்திகா. ஓணம் நெருங்கி வரும் வேளையில் படு பிசியாக இருந்த கார்த்திகாவைப் பிடித்து கொஞ்சம் போல அவர் குறித்து கிளறினோம். ஆனால் நிறையவே பேசினார்.

அம்மா பெயர் ஆலீஸ், அப்பா பெயர் ஜேக்கப். அச்சனுக்கு டயர் கம்பெனியில் வேலையாம். கார்த்திகாவுக்கு எல்டா என்ற தம்பி இருக்கிறாராம். மொத்தமே இத்தனை பேர்தானாம் வீட்டில்.

முதன் முதலில் வினயன் படத்தில்தான் நடித்தாராம். இவரது பெயரை மாற்றியவரும் வினயன்தானாம். என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது லிடியாவின் நட்சத்திரத்தை வைத்து கார்த்திகா என்று பெயர் சூட்டினாராம் வினயன்.

வருடா வருடம் வரும் ஜனவரி 30ம் தேதிதான் கார்த்திகா பிறந்தாராம். பி.இ. ஆங்கில இலக்கியப் பட்டத்தை வாங்கியுள்ள கார்த்திகா, அவதரித்த பெருமை கொண்டது எர்ணாகுளம்.

முதல் படமான ஊமைப் பெண்ணும், உரியாடா பையனும் படத்திற்காக ரூ. 25 ஆயிரம் சம்பளமாக வாங்கினாராம். இப்போது எவ்வளவு என்று தெரியவில்லை.

நல்ல நல்ல கதைகளாக தேர்வு செய்து நடிக்க ஆர்வமாக உள்ளாராம். பிடித்த நடிகை ராணி முகர்ஜி. ஜோதிகாவையும் பிடிக்குமாம். கஜோல்னா உயிராம். பிடித்த நடிகர் ஷாருக் கான். கஜோலும், ஷாருக்கும் நடித்த தில்வாலே துல்ஹானியா லேஜாயங்கே படத்தை பல தடவைப் பார்த்து ரசித்தாராம்.

கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டாராம். கிளாமர் எனது உடல் வாகுக்கும், முகத்திற்கும் ஒவ்வாது. நல்ல குடும்பப் பாங்கான ரோல்களில் மிளிரத்தான் ஆசை என்கிறார் புன்னகையுடன்.

இப்போது நாயகியாக கோடம்பாகத்தை வலம் வரும் கார்த்திகா இதற்கு முன்பே காசி, என் மன வானில் ஆகிய படங்களில் குட்டிப் பெண்ணாக வந்து போயுள்ளார் என்பது தெரியும்தானே.

இப்போது நடித்துக் கொண்டிருக்கும் மூன்று படங்களுமே எனக்கு நல்ல பெயர் வாங்கித் தரும். அடுத்த ரேவதி நான்தான் பாருங்க என்று பெருமையாக கூறிக் கொண்டிருக்கிறார் கார்த்திகா.

ரேவதியாவதும், சில்க் ஆவதும் தயாரிப்பாளர்கள் கையில் அல்லவா இருக்கிறது!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil