»   »  சாது மிரண்டா .. காவ்யா

சாது மிரண்டா .. காவ்யா

Subscribe to Oneindia Tamil

தமிழில் அதிர்ஷ்டமில்லாமல் போய் விட்ட காவ்யா மாதவன் மீண்டும் ஒரு முயற்சியாக தமிழுக்கு வருகிறார்.

கேரளாவிலிருந்து வந்த நாயகிகளில் ஒருவர் காவ்யா. மற்ற கேரள அழகிகளான மீரா ஜாஸ்மின், நயனதாரா, ஆசின் உள்ளிட்டோர் அளவுக்கு இவருக்கு தமிழ் கை கொடுக்கவில்லை.

வந்த வேகத்தில் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டார் காவ்யா. காவ்யா தமிழில் நடித்து அறிமுகமாகிய படம் காசி. இது விக்ரமுக்கு பெரும் ராசியைக் கொடுத்தது, ஆனால் காவ்யாவுக்கு ஸாரி சொல்லியது.

அடுத்து வந்த என் மனவானில் படத்திலும் காவ்யா நடித்திருந்தார். படம் பேசப்பட்டதே தவிர படத்துக்கு அதிக ஆதரவில்லை. இதனால் காவ்யா அப்செட் ஆகி மலையாளத்துக்கேத் திரும்பிப் போய் விட்டார்.

முதல் இரு தமிழ்ப் படங்களும் கை விட்டு விட்டதால் தொடர்ந்து மலையாளப் படங்களிலேயே தீவிர கவனம் செலுத்தி வந்தார் காவ்யா. தமிழில் தன்னைத் தேடி வந்த வாய்ப்புகளை கூட அவர் ஏற்கவில்லை.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக அவரைத் தேடி ஒரு தமிழ்ப் படம் வந்துள்ளது. மலையாளத்தில் பிரபலமான சித்திக் இயக்கும் புதிய தமிழ்ப் படத்தில் காவ்யா நடிக்கிறார். தமிழில் ஃபிரண்ட்ஸ், எங்கள் அண்ணா ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் சித்திக்.

இப்போது சாது மிரண்டா என்ற பெயரில் புதிய தமிழ்ப் படத்தை இயக்குகிறார் சித்திக். வேலையில்லாத பட்டதாரி வேடத்தில் பிரசன்னா ஹீரோவாக நடிக்கிறார். டிவி தொகுப்பாளினி வேடத்தில் காவ்யா நடிக்கிறார்.

சாது மிரண்டா மூலம் மீண்டும் தமிழில் தனது அதிர்ஷ்டத்தைப் பரீட்சித்துப் பார்க்க வருவது குறித்து காவ்யா கூறுகையில், ஒவ்வொரு மலையாள நடிகைக்கும், தமிழில் நடிக்க வேண்டும் என்பது கனவாக மாறியுள்ளது. உலக அளவில் பரந்து விரிந்து கிடக்கும் மார்க்கெட், உடனடி புகழ் (கை நிறையப் பணம்) என இதற்குப் பல காரணங்கள்.

சாது மிரண்டா படம் மூலம் எனக்கும் தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். சித்திக் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் இந்தப் படம் சில்வர் ஜூப்ளி என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

செந்தில் ஸ்டுடியோவில் நடந்த பூஜைக்குப் பின்னர் சித்திக் பேசுகையில், சாது மிரண்டா படத்தின் ஸ்கிரிப்ட்டை பக்காவாக தயார் செய்துள்ளோம்.

சூழ்நிலைதான் ஒருவரை நல்லவராகவோ அல்லது கெட்டவாரகவோ மாற்றுகிறது. இதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. இதே மாதிரியான கதையோட்டத்துடன் பல படங்கள் வந்துள்ளன. ஆனால் இந்தப் படத்தில் எனது அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

இயக்குநரின் நடிகராக இருப்பவர் பிரசன்னா. எந்த மாதிரியான கேரக்டரையும் செய்யக் கூடிய திறமை படைத்தவர். அதனால்தான் அவரை எனது நாயகனாக தேர்வு செய்தேன். காவ்யாவின் திறமைகள் பற்றி சொல்லவே தேவையில்லை என்றார் சித்திக்.

இவர்கள் தவிர நம்மூரு அப்பாஸ், சார்லி, ரமேஷ்கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ் ஆகியோரும் மலையாளத்திலிருந்து கலாபவன் மணி, தெலுங்கிலிருந்து கோட்டா ஸ்ரீனிவாசராவ் ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர்.

சித்திக் படத்தில் காமெடிக்குப் பஞ்சம் இருக்காது. இந்தப் படத்திலும் அந்த அக்கப்போருக்கு குறைவிருக்காது என்று நம்பலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil