என்னை பற்றி வலம் வரும் அந்த செய்தி முற்றிலும் உண்மையில்லை.. திடீரென மாளவிகா மோகனன் விளக்கம்!
சென்னை: தன்னை பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும் உண்மையில்லை என்றும் நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
பிரபாஸின் ராஜாசாப், கார்த்தியின் சர்தார் 2 என பல படங்களில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் அடுத்ததாக, இயக்குநர் பாபி கொல்லி இயக்கவுள்ளபடத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், அது முற்றிலும் வதந்தி எனக்கூறியுள்ளார்.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தான் சிரஞ்சீவி படத்தில் நடிக்கவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிரஞ்சீவிக்கு ஜோடியா நடிக்கல: மாளவிகா மோகனன் தனது பதிவில், "சிரஞ்சீவி சாருடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலாக இருக்கிறேன். ஆனால், பாபி சார் இயக்கும் 'மெகா 158' படத்தில் நான் நடிப்பதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தப் படத்தில் நான் ஒரு பகுதியாக இல்லை," என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரபாஸ் ஹீரோயின்: தற்போது மாளவிகா மோகனன், பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். இப்படம் 2026 ஜனவரியில் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. கார்த்தியின் சர்தார் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டுக்கு சென்ற மாளவிகா மோகனனுக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில், டோலிவுட்டில் தொடர்ந்து பெரிய படங்களை குறிவைத்து வருகிறார் என்கின்றனர்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி: சிரஞ்சீவி மற்றும் பாபி கொல்லி இணையும் புதிய படம், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிரஞ்சீவியின் பிறந்தநாளில் ஒரு கான்செப்ட் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்காலிகமாக 'சிருபாபி2' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணி, ஏற்கனவே 'வால்ட்டர் வீரய்யா' (2023) எனும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படத்தை அளித்திருந்தது.
பாபி கொல்லியின் முந்தைய படமான 'டாக்கு மகாராஜ்', இந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருந்தார்.
மோகன்லால் படத்தில்: இதற்கிடையில், மாளவிகா மோகனன் சமீபத்தில் மோகன்லால் நடித்த மலையாளத் திரைப்படமான 'ஹ்ருதயபூர்வம்' படத்தில் நடித்திருந்தார். ஓணம் பண்டிகையின் போது வெளியான இந்த காதல் நகைச்சுவை-நாடக திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
சோனு டி.பி.யின் திரைக்கதையில் சத்யன் அந்திக்காடு இயக்கிய இந்த படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்தார். இப்படத்தில் சங்கீதா மாதவன் நாயர், சங்கீத் பிரதாப், சித்திக், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன், பாபுராஜ், நிஷான் மற்றும் சபிதா ஆனந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடித்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அடுத்து மாளவிகா மோகனன் நடிக்கப் போவதாக வதந்திகள் உலா வந்த நிலையில், அதிரடியாக அதற்கு மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











