»   »  மம்தா-மீண்டும் தமிழுக்கு 'விசிட்'

மம்தா-மீண்டும் தமிழுக்கு 'விசிட்'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Mamta Mohandas
மலையாளத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்து, தமிழில் தலையைக் காட்டி விட்டு தெலுங்குக்குப் பாய்ந்து விட்ட மம்தா மோகன்தாஸ் மீண்டும் தமிழுக்கு விசிட் அடிக்கிறார்.

லங்கா என்கிற மலையாளப் படத்தில் படு கிளாமராக நடித்து கேரளக் கரையை பரபரப்பில் ஆழ்த்திய மம்தா மோகன்தாஸ், தமிழில் விஷாலுடன் இணைந்து சிவப்பதிகாரம் என்ற படத்தில் நடித்தார்.

ஆனால் அதன் பின்னர் அவருக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் தெலுங்கு மம்தாவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தது. அங்கு நடிக்கும் வாய்ப்போடு பாடும் வாய்ப்புகளும் குவிந்ததால் இரண்டிலும் இரட்டைச் சவாரி செய்து வந்தார்.

சிறந்த பாடகிக்கான மாநில அரசின் விருதையும் மம்தா பெற்றுள்ளார்.

கிட்டத்தட்ட தெலுங்கிலேயே செட்டிலாகி விட்ட மம்தா, தற்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார். அவர் நடிக்கப் போகும் படத்தை இயக்கவிருப்பது மலையாளத்து பாசில். ஹீரோவாக நடிக்கவிருப்பது மலையாளத்து பிருத்விராஜ். படத்தை தயாரிக்கவிருப்பதும் ஒரு மலையாளிதான் - இயக்குநர் பிரியதர்ஷன்.

இத்தனை மலையாளக் கலைஞர்களும் இணைந்து உருவாக்கவுள்ள இந்தத் தமிழ்ப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

பாசில் கூறிய கதையைக் கேட்டு திருப்தி அடைந்த மம்தா அதில் நடிப்பதாக கூறினாராம். உடனடியாக கால்ஷீட்டும் கொடுத்து விட்டாராம். மம்தா உடனடியாக கால்ஷீட் கொடுக்க முக்கியக் காரணமே, நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் என அனைவருமே மலையாளிகள் என்பதால்தானாம்.

இந்தப் புதிய படம் குறித்து மம்தா கூறுகையில், பாசில் சாருடன் இணைவதும், பிருத்விராஜுடன் இணைவதும் எனக்குப் புதிதல்ல. அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். இந்தப் படம் எனக்கு திருப்புமுனையாக அமையும் என்றார்.

இப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் (அனில் அம்பானியின் படத் தயாரிப்பு நிறுவனம்) நிறுவனத்துடன் இணைந்து பிரியதர்ஷன் தயாரிக்கிறாராம். அடுத்த வாரம் ஷூட்டிங் ஆரம்பமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil