மரணத்திலிருந்து தப்பித்த மீனா.. சௌந்தர்யாவுடன் அவரும் போயிருக்க வேண்டியது.. அவரே சொன்ன ஷாக் நியூஸ்
சென்னை: மீனா தமிழ் சினிமாவில் ஃபேமஸ் நடிகையாக வலம் வந்தவர். 90களில் அவர் நடித்த ஏராளமான படங்கள் மெகா ஹிட்டாகி அவரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாற்றியது. சூழல் இப்படி இருக்க வித்யாசாகர் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இன்று அவர் பிறந்தநாள் கொண்டாடிவரும் சூழலில் மீனா கொடுத்திருக்கும் பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட்டில் எத்தனையோ நடிகைகள் வந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்களில் ரொம்பவே ஃபேமஸாக இருப்பவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த அவர் சிவாஜி, ரஜினி உள்ளிடோருடன் அப்போதே நடித்துவிட்டார். முக்கியமாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மீனா குழந்தையாக நடித்தது பலரது பாராட்டை பெற்றது. மிகச்சிறந்த நடிகையாக வருவார் என்று அப்போதே அவர் பெயர் எடுத்துவிட்டார்.
முன்னணி ஹீரோயின்: தமிழில் ஹீரோயினாக அறிமுகமான முதல் படமே மெகா ஹிட்டடித்தது. அந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தனக்கு கிடைத்த நிறைய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர். அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்ட அவர்; மறுபக்கம் அப்போது வளர்ந்துவந்த நடிகராக இருந்த அஜித் உள்ளிட்டோருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

உயிரிழந்த கணவர்: ஹீரோயின் வாய்ப்பு குறைந்த சமயத்தில் வித்யாசாகர் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவரும் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தார். அதற்கு பிறகு நடிக்கவில்லை. மீனாவும் சில வருடங்கள் நடிக்காமல் இருந்து திரிஷ்யம் உள்ளிட்ட படங்களில் கேரக்டர் ரோலை ஏற்றிருந்தார். தொடர்ந்து அவர் நடிக்க வேண்டுமென்பது அவரது ரசிகர்களுடைய ஆசையாக இருக்கிறது.
மீனா பேட்டி: சூழல் இப்படி இருக்க இன்று அவர் தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மீனா மறைந்த நடிகை சௌந்தர்யா குறித்து பேசினார். அவர் பேசுகையில், 'எனக்கும், சௌந்தர்யாவுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது. சௌந்தர்யா எனக்கு நல்ல தோழி என்பதோடு மட்டுமின்றி அற்புதமான நபரும்கூட.
நானும் சென்றிருக்க வேண்டியது: சௌந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அன்று தேர்தல் பரப்புரைக்கு நானும் அவருடன் அந்த ஹெலிகாப்டரில் சென்றிருக்க வேண்டியது. என்னையும் அழைத்தார்கள். ஆனால் அரசியல், பரப்புரை ஆகியவைகளில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. எனவே ஷூட்டிங் இருப்பதாக சொல்லி அன்றைய தினம் செல்வதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன்' என்றார்.


Click it and Unblock the Notifications











