»   »  பரத்துடன் இணையும் மீரா

பரத்துடன் இணையும் மீரா

Subscribe to Oneindia Tamil

தனுஷுடன் ஜோடி போட்ட கையோடு பரத்தோடு பரபரப்பான நடிப்புக்கு ரெடியாகி விட்டார் மீரா ஜாஸ்மின்.

ஜோடி போடும் நடிகர் யார் என்பதை விட கதை என்ன, நம்ம கேரக்டரின் கனம் என்ன என்பதற்குத்தான் மீரா ஜாஸ்மின் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

அப்படித்தான் இதுவரை நடித்துள்ளார். எல்லா நடிகைகளும் எஸ்.ஜே.சூர்யாவோடு இணைந்து திருமகனில் நடிக்கத் தயங்கியபோது துணிந்து நடித்தவர் மீரா. இப்போது பாராட்டு மழையில் நனைந்து நனைந்து குளிர்ந்து போய்க் கிடக்கிறார்.

திருமகன் படத்தில் நடித்துள்ள ராதாரவி, மீராவின் நடிப்பைப் பாராட்டித் தள்ளி விட்டாராம், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே. அத்தோடு, நீ மட்டும் தமிழில் பேசி நடித்திருந்தால் அவார்டு நிச்சயம் என்றும் பாராட்டினாராம். இதனால் தற்போது மீராவுக்கு அவார்டு ஆசை வந்துள்ளது (ஏற்கனவே மலையாளத்தில் அவர் தேசிய விருது வாங்கியுள்ளார்). தீவிரமாக தமிழ் கற்க ஆரம்பித்துள்ளாராம்.

திருமகனை முடித்து விட்டு அவர் நடிக்கப் போன படம் பரட்டை என்கிற அழகுசுந்தரம். இப்படத்தில் அவருக்கு ஜோடி தனுஷ். இந்தப் படம் முடிந்து விட்டதால் அடுத்து படத்துக்கு ரெடியாகி விட்டார்.

இம்முறை மீரா ஜோடி போடப் போவது பரத். மீரா போன்ற நடிப்பனுவபம் மிக்க நடிகைகளுடன் ஜோடி போட நடிகர்களுக்கு கசக்குமா என்ன? பரத்தும் மீராவுடன் சேர்ந்து நடிக்க படு ஆவலாக உள்ளாராம்.

இருவரும் இணையும் படத்தின் பெயர் நேபாளி (தமிழ் வார்த்தையா இது?) விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம். முகவரி, தொட்டி ஜெயா, காதல் சடுகுடு ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரைதான் இந்தப் படத்தையும் இயக்கப் போகிறார்.

தற்போது கில்லாடி படத்தில் பரத் பிசியாக உள்ளார். இதை முடித்து விட்டு நேபாளிக்கு வருகிறார். குத்துப் பாட்டுக்கு கொத்துப் புரோட்டா போடும் ஸ்ரீகாந்த் தேவாதான் இப்படத்துக்கு இசையாம். எனவே சதை நடுங்க வைக்கும் குத்துப் பாட்டும், குமுறல் ஆட்டமும் நிச்சயம்.

ஊட்டி, சென்னை, ஹைதராபாத் ஆகிய ஊர்களில் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.

விக்ரம் ரேஞ்சுக்கு மாறத் துடிக்கிறார் பரத். அதற்கு இந்தப் படம் உதவும் என நம்புகிறார். நல்லது நடக்க வாழ்த்துவோம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil