»   »  'ஜெகன்மோகினி' நமீதா!

'ஜெகன்மோகினி' நமீதா!

Subscribe to Oneindia Tamil
Namitha
30 வருடங்களுக்கு முன்பு கிலி ஏற்படுத்திய ஜெகன்மோகினி மீண்டும் பயமுறுத்த வருகிறது. ஜெகன்மோகினியாக அலற வைக்க வருவது 'நச்' அழகி நமீதா.

இது ரீமேக் காலம். முன்பு ரீமேக் என்றால், பிற மொழிப் படங்களின் கதையை தமிழில் ரீமேக் செய்தார்கள். ஆனால் கதைக்காக மூளையைக் கசக்கி, ஹோட்டல் ரூம்களை தேய்த்து, டைம் வேஸ்ட் பண்ணாமல், ஏற்கனவே ஹிட் ஆன தமிழ்ப் படங்களின் கதையையே ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

நான் அவனில்லை, பில்லா ஆகிய இரு ரீமேக் படங்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, ரீமேக் மோகம் கோலிவுட்டில் படு வேகமாகியுள்ளது.

30 வருடங்களுக்கு முன்பு விட்டலாச்சாரியா தயாரிப்பு-இயக்கத்தில் வெளிவந்த ஜெகன் மோகினி இப்போது இந்தக் காலத்து கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதியுடன் உதவியால் மீண்டும் தமிழ் ரசிகர்களை மயக்க வருகிறது.

ஜெகன்மோகினியில், நாயகியாகவும், பேயாகவும் வந்து கலக்கியவர் ஜெயமாலினி. அவரது கவர்ச்சியும், கால்களை விறகாக வைத்து அடுப்பில் போட்டு எரிப்பது போன்ற திகில் காட்சிகளும் இன்றைக்கும் விறுவிறுப்பு உணர்வை கொடுக்கத் தவறுவதில்லை.

நரசிம்மராஜூ - ஜெயமாலினி ஜோடியாக நடித்து 1978ம் ஆண்டு வெளிவந்த ஜெகன் மோகினி மாயாஜாலமும், திகிலும் நிறைந்த படம்.

தெலுங்கில் உருவான இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்தபோது மாபெரும் வெற்றியை பெற்றது.

30 வருடங்களுக்கு முன்னர் வந்த ஜெகன் மோகினியை தற்போது இருக்கும் கிராபிக்ஸ் யுகத்தை பயன்படுத்தி நவீன முறையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை அவ்வை சண்முகி, போஸ் படங்களை தயாரித்த எச்.முரளி தயாரிக்கிறார்.

புதிய ஜெகன் மோகினியை என்.கே.விஸ்வநாதன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே இணைந்த கைகள், பெரியவீட்டு பண்ணைக்காரன் உட்பட பல படங்களை டைரக்ட் செய்தவர்.

புதிய ஜெகன் மோகினியில் கதாநாயகியாக நடிக்க நமீதா நடிக்கவுள்ளார். ஜெயமாலினிக்கு சமமான கவர்ச்சியும், நல்ல உயரத்துடனும் இருப்பதால் நமீதாவை பேசியுள்ளனர்.

படம் குறித்து என்.கே.விஸ்வநாதன் கூறுகையில், பழைய ஜெகன் மோகினி படத்தை அப்படியே படமாக்கவில்லை. தற்போது இருக்கும் சூழலுக்கேற்ப சில மாற்றங்களை செய்திருக்கிறோம்.

ஆனால் சரித்திர கதைகளில் வரும் ஒரு ராஜா-ராணி கதை என்பது உறுதி. இதில் நமீதா நடிப்பதும் கட்டாயம். படப்பிடிப்பு வெகுவிரைவில் துவங்க உள்ளது என்றார்.

நமீதா, இதுவரை ஜெகன் மோகினியை பார்க்கவில்லையாம். விரைவில் பார்க்கத் திட்டமிட்டுள்ளாராம். அந்தக் காலத்து கலக்கல் கனவுக் கன்னி ஜெயமாலினி வேடத்தில் நடிப்பது பெருமையாக இருப்பதாக நமீதா கூறுகிறார்.

நமக்கு பயமாக இருக்கிறது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil