»   »  நமீதாவின் அஞ்சவதாரம்!

நமீதாவின் அஞ்சவதாரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் மட்டும் அவதாரம் எடுக்க முடியுமா, என்னால் முடியாதா என்று சவால் விடும் வகையில், நமீதா ஐந்து வித்தியாசமான கெட்டப்களில் புதிய படம் ஒன்றில் புகுந்து விளையாடவுள்ளார்.

விதம் விதமான கெட்டப்களில் கலக்குபவர் கமல். இப்போது அந்த இடத்திற்கு விக்ரமும், சூர்யாவும் கடுமையாக முட்டி மோதிக் கொண்டுள்ளனர்.

ஆனால் நடிகைகளில் வித்தியாசமான கெட்டப்களில் நடித்தவர்கள் எண்ணிக்கை ரொம்பவே குறைச்சல். முன்பு, இந்தியன் படத்துக்காக சுகன்யா கிழவி வேடத்தில் நடித்தார். அதேபோல, குண்டு மல்லி குஷ்பு, கன்னடப் படம் ஒன்றில் (அஜ்ஜி) பாட்டி வேடத்தில் நடித்தார். ஆனாலும் மேக்கப் முற்றிலும் பொருந்தாமல் கவர்ச்சிப் பாட்டியாக காட்சி அளித்தார்.

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களது ஹீரோக்கள் என்ன செய்கிறார்கள் என்றுதான் முதலில் பார்ப்பார்கள். ஹீரோயின்கள் எப்படி வந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை (ஆனால் அழகா மட்டும் இருக்கோணும்).

இப்படிப்பட்ட நிலையில் இரட்டை வேடம் கிடைத்தாலே ஹீரோயின்களுக்கு பெரிய விஷயம். இந்த நிலையில், தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக நம்ம நமீதா ஐந்து வித்தியாசமான கெட்டப்களில் நடித்து அசத்தப் போகிறார். படத்தின் பெயர் மல்லிகை மலரே.

கார்த்திக்கை வைத்து அமரன், இதயத்தாமரை, சிம்ரனை வைத்து கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ்வர்தான் இப்படத்தை இயக்கப் போகிறார்.

நமீதா நச்சென ஐந்து வேடங்களில் அசத்தப் போகும் மல்லிகை மலரே குறித்து ராஜேஷ்வர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இப்படத்தில் பிளஸ் டூ மாணவி முதல் 40 வயது பெண்மணி வரையிலான ஐந்து வேடங்களில் வருகிறாராம் நமீதா.

இவ்வளவு வெயிட்டான ரோலுக்கு கவர்ச்சி கதகளி நமீதாவை எப்படி தேர்வு செய்தீர்கள் என்றால், நமீதாவால் சிறப்பாக நடிக்கவும் முடியும். அவருக்குள் நடிப்பும் ஒளிந்திருக்கிறது. அதை வெளியே கொண்டு வர முடியும். அந்த நம்பிக்கையில்தான் அவரை இப்படத்துக்கு புக் செய்தோம் என்றார் ராஜேஷ்வர்.

தொடர்ந்து அவரே, முதல் மரியாதை படத்தில் ராதா செய்தது போன்ற கனமான பாத்திரத்தில் கூட நமீதாவால் சிறப்பாக நடிக்க முடியும் என்றார்.

அவருக்கு அருகே அடக்கமாக அமர்ந்திருந்த நமீதாவிடம் மைக் பாஸ் ஆனபோது, இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன், கொடுத்ததற்கா ராஜேஷ்வருக்கு நன்றி சொல்கிறேன். இப்படத்தில் எனது நடிப்புத் திறமையை ரசிகர்கள் சந்தோஷமாக அனுபவித்துப் பார்ப்பார்கள்.

ராஜேஷ்வர் என்னிடம் கதை சொன்னபோது நான் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டேன். தமிழில் இதுவரை எனது கிளாமருக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள். முதல் முறையாக நடிப்புத் திறமையை வெளிக்காட்ட நல்ல வாய்ப்பு என்பதால் உடனே ஓ.கே. சொல்லி விட்டேன்.

சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை சாடும் படம் இது. நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படிப்பட்ட ஏற்றத் தாழ்வுகளைப் பார்த்து பொங்கும் பெண்தான். எனது நிஜ கேரக்டருடன், இந்த நிழல் கேரக்டர் ஒத்துப் போனதால்தான் நான் சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இப்படத்தில் நடிக்க நான் சம்பளம் பற்றிக் கூட அதிகம் டிமாண்ட் செய்யவில்லை. நல்ல படம் என்பதே எனக்குப் போதும். இப்படத்தில் நான் சொந்தக் குரலில் தமிழில் பேசி நடிக்க ஆர்வமாக உள்ளேன். ராஜேஷ்வர் அனுமதிப்பார் என்று நம்புகிறேன் என்று அவரைப் பார்த்துப் புன்னகைத்தவாரறே கூறினார் நமீதா.

தமிழில் வசனம் பேச வேண்டும் என்பதற்காக இப்போதே ஒரு வாத்தியாரைப் போட்டு தமிழ் கற்க ஆரம்பித்து விட்டாராம் நமீதா. அவரும், அ, ஆ என்று நமீதாவுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்து வருகிறாராம்.

இந்தப் படத்தில் தனக்கு நிச்சயம் ஏதாவது ஒரு அவார்டு கிடைக்கும் என திடமாக நம்புகிறார் நமீதா. பிளஸ்டூ மாணவியாக இப்படத்தில் நமீதாவின் கேரக்டர் ஆரம்பிக்கிறதாம். அப்படியே அடுத்தடுத்த நான்கு கால கட்டத்திற்குக் கதை மாறுமாம்.

நமீதாவின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கிளாமரும் சரிவிகிதமாக கலந்து கொடுக்கப்படவுள்ளதாம். ஆனாலும் அதை விட முக்கியமாக நடிப்புக்கு நல்ல தீனி கொடுக்கப் போகிறாராம் ராஜேஷ்வர்.

நமீதா, நீ நல்ல நடிப்பையும் தா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil