மறக்க முடியுமா இவரை...25 வது நினைவு நாளில் சில்க் பெயரில் புதிய படம்
சென்னை : 1980 களில் சினிமா உலகில் கொடி கட்டி பறந்தவர் சில்க் ஸ்மிதா. தனது முதல் படமான வண்டிச்சக்கரம் படத்தில் சில்க் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். இதனால் சினிமாவிற்காக விஜயலட்சுமி என்ற தனது பெயரை சில்க் ஸ்மிதா என மாற்றிக் கொண்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் டாப் ஹீரோயின்களுக்கு இணையாக புகழின் உச்சியில் இருந்தவர் சில்க் ஸ்மிதா. கவர்ச்சி நடிகையான சில்க் ஸ்மிதா 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு பாடலுக்கு மட்டும் வந்து பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
இளைஞர்கள் முதல் வயதானவர் வரை சில்க் ஸ்மிதாவின் பெயரை சொன்னாலே ஜொள்ளு விடும் அளவிற்கு அனைவரின் மனதையும் ஈர்த்தார். இவருக்கு நண்பர் வட்டம் மிகக் குறைவு. யாரிடமும் அதிகம் பழகாத இவர், திறமையான, நேர்மையான நடிகை என நெருங்கிய வட்டாரங்களால் புகழப் பெற்றவர். குழந்தை மனம் கொண்டவர் என இவரிடம் நெருங்கி பழகிய பலர் பாராட்டுவார்கள்.
1996 ம் ஆண்டு செப்டம்பர் 23 ம் தேதி தனது நெருங்கிய தோழியான நடிகை அனுராதாவை தொடர்பு கொண்டு, சில விஷயங்கள் பற்றி பேச வேண்டும் என கூறி அழைத்துள்ளார். தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு வருவதாக அனுராதாவும் கூறி உள்ளார். அதற்குள் சில்க் ஸ்மிதா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
சில மாதங்களுக்கு பிறகு இது தற்கொலை என போலீசார் உறுதி செய்தனர். ஆனால் இன்று வரை சில்க் ஸ்மிதா எதற்காக தற்கொலை செய்து கொண்டார், என்ன பிரச்சனை, அவர் கடைசியாக அனுராதாவிடம் என்ன பேச நினைத்தார் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. சில்க் ஸ்மிதா உயிரிழந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவரை நினைவில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
1980 களின் கனவுக்கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் நினைவாக அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி.பிள்ளை சில்க் என்ற படத்தை தயாரிக்க போவதாக அறிவித்துள்ளார். சில்க் ஸ்மிதாவின் 25 வது நினைவு நாளான இன்று இந்த படம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முன்னணி ஹீரோ ஒருவரிடம் பேசப்பட்டு வருகிறதாம். அதே போல் இவருக்கு ஜோடியாக நடிக்க நான்கு ஹீரோயின்களின் தேர்வும் நடைபெற்று வருகிறதாம்.
வழக்கு எண் 18/9, தனி ஒருவன் படங்களின் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா இந்த படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார். ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக இந்த படம் எடுக்கப்பட உள்ளதாம். ஏற்கனவே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் சில்க் ஸ்மிதாவின் ரோலில் வித்யா பாலன் நடத்திருந்தார்.


Click it and Unblock the Notifications











