»   »  பூஜாவை எதிர்த்த நடிகைகள்!

பூஜாவை எதிர்த்த நடிகைகள்!

Subscribe to Oneindia Tamil


பூஜா சிங்களப் படத்தில் நடிக்கப் போனபோது அவருக்கு எதிராக அங்குள்ள நடிகைகள் போர்க்கொடி உயர்த்தினார்களாம். ஆனால் சிங்களப் பாசத்தை மனதில் கொண்டு தங்களது எதிர்ப்பை துறந்து விட்டு ஆதரவுக் கரம் நீட்டினார்களாம்.

Click here for more images

சிங்களத் தாய்க்கும், இந்தியத் தந்தைக்கும் பிறந்தவர் பூஜா. பெங்களூரில் வாசம் புரிந்தபடி தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தார். பூஜா இதுவரை நடித்த அத்தனை படங்களிலும் அவரது நடிப்பு பேசப்பட்டது.

சிங்களத்தில் அவர் நடிக்கப் போனதால் இடையில் சில காலமாக பூஜாவை தமிழ் சினிமாப் பக்கமே காணவில்லை. அவர் நடித்த முதல் சிங்களப் படம் அஞ்சலிகா அங்கு பெரும் வெற்றி பெற்றது.

இதையடுத்து மேலும் இரு சிங்களப் படங்களில் அவர் நடிக்க ஒப்புக் ெகாண்டிருக்கிறாராம். என்னங்க, இனிமே சிங்களம் மட்டும்தானா, தமிழ் பக்கம் வரும் ஐடியா உண்டா என்று பூஜாவை கிளறினோம்.

அதற்கு தனது டிரேட் மார்க் சின்னச் சிரிப்பை சிந்தியபடி பூஜா கூறுகையில், அப்படியெல்லாம் இல்லை. நான் பிறந்தது இலங்கை. எனது அம்மப்பா, அம்மம்மா (அதாவது தாத்தா, பாட்டி) எல்லோரும் அங்குதான் இருக்கிறார்கள்.

என்னை இலங்கைக்கே வந்து விடுமாறு வலியுறுத்துகிறார்கள். இருந்தாலும் நான்தான் இந்தியாவிலேயே இருக்கிறேன்.

நான் நடித்த அட்டகாசம் படத்தை இலங்கைத் தயாரிப்பாளர்கள் சிலர் பார்த்து எனது நடிப்பைப் பாராட்டினார்கள். சிங்களப் படத்திலும் நடிக்கலாமே என்று அவர்கள்தான் அழைத்தார்கள். அப்போதுதான் இயக்குநரும், நடிகருமான சென்னபெரேரா தனது அஞ்சலிகா படம் குறித்து கூறினார்.

கதை பிடித்திருந்ததால் அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். எனது அம்மா சிங்களப் பெண்மணியாக இருந்தாலும் கூட எனக்கு சுத்தமாக சிங்களம் தெரியாது. ஆனால் அஞ்சலிகாவில் நடிக்கப் போய் இப்போது எனக்கு புரியும் அளவுக்கு சிங்களம் தெரிகிறது.

நான் அஞ்சலிகாவில் நடிக்க போனபோது அங்கிருக்கும் முன்னணி நடிகைகளுக்கு அது பிடிக்கவில்லை. ஒரு இந்திய நடிகை இங்கு நடிக்க வருவதா என்று கோபப்பட்டனர். போராட்டத்திலும் கூட ஈடுபட்டார்கள். ஆனால் நான் அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமான பின்னர் அவர்கள் தங்களது போராட்டத்தை விட்டு விட்டனர்.

அஞ்சலிகா இலங்கையில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து எனக்குப் பாராட்டுக்கள் குவிந்துள்ளன என்றார் பூஜா.

இப்படத்தில் இரட்டை வேடத்தில் பூஜா நடித்துள்ளாராம். படப்பிடிப்பு முழுவதும் இலங்கையிலேயே நடந்ததாம்.

தற்போது பூஜா தமிழில் நான் கடவுள் படத்தில் பிச்சைக்காரப் பெண் வேடத்தில் பாலா இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சிங்களத்தில் யாலுவோ, ஆசை மாத பியம்பன்னோ என இரு படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ரிலீஸ் ஆகிறதாம்.

பூஜா நடித்த அஞ்சலிகா சென்னையில் நடந்த இலங்கை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 5 நாட்கள் நடந்த இந்த திரைப்பட விழாவை நடிகை ராதிகா சரத்குமார் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ராதிகா பேசுகையில், நான் சிறு வயதில் இலங்கையில் இருந்திருக்கிறேன். இலங்கைக்கும், எனக்கும் நெருங்கிய உறவு உண்டு. எனது எந்த செயலிலும் இலங்கையின் சாயல் இருக்கும் என்று பாசத்தைப் பொழிந்தார்.

மேலும், இலங்கையைச் சேர்ந்த மகாராஜா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்திற்கும், தனது ரேடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் இருப்பதாகவும், இரு நிறுவனங்களும் இணைந்து டிவி தொடர்கள் மற்றும் திரைப்படங்ளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை தேசிய திரைப்பட கழக தலைவர் அசோக சரசிங்கே, இலங்கை துணைத் தூதர் அம்சா, நல்லி குப்புசாமி செட்டி, அஞ்சலிகா இயக்குநரும், ஹீரோவுமான சென்ன பெரேரா உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

Read more about: pooja, tamil cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil