»   »  சிந்திக்கு வந்த இந்தி ரோஜா!

சிந்திக்கு வந்த இந்தி ரோஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியில் பிசியாக நடித்து வரும் அழகு ராணி ப்ரீத்தி ஜாங்கியானி சிந்தியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தயாராகியுள்ள படத்தில் நடித்துள்ளார்.

கடந்த 60 வருடங்களில் 20 படங்களே தயாரிக்கப்பட்டு, ரிலீஸ் ஆகியுள்ள சாதனையைக் கொண்டுள்ள சிந்தி திரையுலகில், ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரு படம் ரிலீஸாகவுள்ளது.

இந்தியத் திரையுலகில் உள்ள சின்னத் திரையுலகம்தான் சிந்தி. எப்போதாவதுதான் இங்கு படங்கள் வரும். பல ஆண்டுகளுக்கு ஒரு படமும் வராமலும் இருக்கும்.

கடந்த 60 ஆண்டுகளில் மொத்தமே 20 படங்கள்தான் சிந்தி மொழியில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சிந்தி மொழியில் ஒரு படமும் வரவில்லை. கிட்டத்தட்ட சிந்தித் திரையுலகமே செயல்படாமல் இருந்தது.

இந்த நிலையில், டென்மார்க்கில் பிசினஸ் செய்து வரும் ஹர்வானி என்பவர், எடுத்த முயற்சியின் விளைவாக ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரு சிந்திப் படம் திரைக்கு வரவுள்ளது.

பியார் கரே திஸ்: ஃபீல் தி பவர் ஆப் லவ் என்ற பெயரில் புதிய படம் ஒன்றைத் தயாரித்துள்ளார் ஹர்வானி. நேற்று மாலை இந்தப் படம் குறித்த நிகழ்ச்சி மும்பையில் நடந்தது.

ஒரு என்.ஆர்.ஐ. பெண்ணின் கதை இது. காதலை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் காதலின் மென்மையையும், புனிதத்தையும் அழுத்தமாக சொல்லியுள்ளார் இயக்குநர் கமல் நதானி.

இந்தப் படத்தின் நாயகி ப்ரீத்தி ஜாங்கியானி. பாலிவுட் நடிகையான இவர், அமிதாப் பச்சன், ஷாருக்கானுடன் மொகபதீன், கோவிந்தாவுடன் ஷுக், அக்ஷய் குமார், சுனில் ஷெட்டியுடன் ஆன், சுனில் ஷெட்டியுடன் அன்னார்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பால் குடத்தில் முக்கி எடுத்த வெள்ளிக் குத்து விளக்கு போல அவ்வளவு அழகு ப்ரீத்தி ஜாங்கியானி. ஜில்லென்று இருக்கும் ப்ரீத்தி நடிகை மட்டுமல்ல, நல்ல பாடகியும் கூட. கிளாமரிலும், நடிப்பிலும், பாடுவதிலும் சகலகலாவல்லியான ப்ரீத்தி, இந்த சிந்திப் படத்திலும் தனது திறமைகளை மிளிர விட்டுள்ளார்.

இப்படம் குறித்து ஹர்வானி கூறுகையில், நாடு சுதந்திரமடைந்த கடந்த 60 ஆண்டுகளில் இதுவரை 20 படங்களே சிந்தியில் வந்துள்ளது. போஜ்புரி போன்ற சிறிய மொழிப் படங்கள் எல்லாம் வெற்றிகரமாக ஓடும்போது சிந்தி மொழிப் படங்களும் ஏன் ஓடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இப்படத்தைத் தயாரித்தேன்.

சிந்தி மொழியின் வளமையையும் இப்படம் மூலம் வெளிப்படுத்தத் திட்டமிட்டேன். இதுவே எனது முதல் படம். இனி அதிக படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

சிந்தி மொழியைச் சேர்ந்த பலர் இந்தித் திரையுலகில் பைனான்சியர்களாக, கலைஞர்களாக, தயாரிப்பாளர்களாக உள்ளனர். ஆனால் தாய் மொழி குறித்து கவலைப்பட அவர்கள் தவறி விட்டனர். எனது படம் இந்த நிலையை மாற்றும் என்றார் ஹர்வானி.

செப்டம்பர் 14ம் தேதி பியார் கரே திஸ் படம் திரைக்கு வருகிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil