»   »  கந்து வட்டி கொடுமையில் ரம்பா

கந்து வட்டி கொடுமையில் ரம்பா

Subscribe to Oneindia Tamil

செவன்த் சேனல் நிறுவனர் மாணிக்கம் நாராயணனிடம் கந்து வட்டிக் கொடுமையை அனுபவித்து வருவதாக நடிகை ரம்பா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னையில் பாம்குரோவ் ஹோட்டலில் ரம்பா நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ரம்பாவாகிய நான் தமிழ், இந்தி படங்களில் முன்னணி நட்சத்திரமாக உள்ளேன். அதோடு தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறேன்.

எந்த மொழியில் நடித்தாலும் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னையில் என் குடும்பத்தினருடன் தங்குவதுதான் வழக்கம்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் காரணமாக சென்னையில் இருக்கும் எனது சொத்துக்களை விற்று விட்டு, மும்பை சென்றுவிட்டதாக தவறாக செய்திகள் வெளியாகின்றன. இப்போது நான் பண மோசடி வழக்கில் சிக்கியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

எனக்கு சொந்தமாக சைதாப்பேட்டை மெளண்ட் ரோட்டில் ரூ. 2 கோடி சொத்து உள்ளது. அதன் மீது மெளண்ட் ரோடு எச்.டி.எப்.சி. வங்கியில் ரூ.24.48 லட்சம் கடன் பாக்கி இருந்தது.

இது தொடர்பாக திரைப்படத் துறையினருக்கு நன்கு அறிமுகமானவர் என்ற முறையில் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணிடம் பேசினேன். அவர் எச்.டி.எப்.சி. வங்கியை விட குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறினார்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி ரூ.15 லட்சமும், அதற்கு அடுத்த நாள் ரூ.7.5 லட்சமும் பிறகு ரூ.1.98 லட்சம் என அவரே ரூ.24.48 லட்சத்தையும் கட்டி விட்டார். அதற்குப் பதிலாக என் சொத்துப் பத்திரம், ஸ்டாண்டர்ட் சார்டட் வங்கியின் 10 காசோலை (செக்), பல வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

அதோடு எனது பவர் ஏஜெண்டாக அவரிடம் வேலை பார்க்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரை நியமித்தார். நானும் அவர் மீதுள்ள நம்பிக்கையில் இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டேன்.

மாணிக்கம் நாராயணன் மூலமாக மலேசியாவில் நடைபெற்ற அஸ்ட்ரோ சானல் சார்பாக ஐ.டி.எப்.ஏ. விருது வழங்கச் சென்றேன். அதற்காக எனக்கு கொடுக்கப்படவிருந்த ரூ.6 லட்சத்தையும் கடனுக்காக மாணிக்கம் நாராயணன் பிடித்துக் கொண்டார்.

அதேபோல் மதுரையில் நடந்த நடன நிகழ்ச்சிக்காக எனக்குக் கிடைக்க வேண்டிய ரூ.6 லட்சத்தையும் அவர் பிடித்துக் கொண்டார். 1 லட்சம் அட்வான்ஸ் பணத்தை மட்டும் அளித்தார். அதோடு மெளண்ட் ரோடில் உள்ள எனது சொத்து மூலமாக வந்த 3 மாத வாடகை ரூ.3.76 லட்சத்தையும் அவரே வைத்துக் கொண்டார்.

இந் நிலையில் அவருக்கு தர வேண்டிய மீதிப்பணம் ரூ.10.74 லட்சத்தை தரத் தயாராக இருந்தேன். கிருஷ்ணமூர்த்தியை பவர் ஏஜெண்டாக நியமித்ததை ரத்து செய்து சர்டிபிகேட் போஸ்ட் அனுப்பினேன்.

கடனைத் தீர்ப்பதாக மாணிக்கம் நாராயணனிடம் போனிலும், நேரிலும் உறுதி கூறினேன். இருப்பினும் எனது சொத்தை அவரது பெயருக்கு ரூ.77லட்சம் என குறைவாக மதிப்பிட்டு பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் பேச எனது குடும்பத்தினருடன் நான் போனபோது, எங்களுடன் பேசுவதைத் தவிர்த்தார்.

மேலும் பல பெரிய பிரமுகர்களின் பெயர்களைச் சொல்லியும் அடியாட்கள் பலம் இருப்பதாகவும் என்னை மிரட்டினார். இதனால் உயர் நீதிமன்றத்தை அணுகினேன். நீதிபதி அசோக்குமார் எனது மனுவை விசாரித்து, நான் செலுத்த வேண்டிய கடன் பாக்கியை வட்டியுடன் மாணிக்கம் நாராயணுக்கு செலுத்த உத்தரவிட்டார். அதனால் கடன் தொகை ரூ.10.74 லட்சத்தை நீதிமன்றத்தில் கட்டினேன்.

இதையடுத்து நான் கொடுத்த வங்கிக் காசோலைக்கு ஸ்டாப் பேமண்ட் கொடுத்து, அதைத் திரும்பக் கொடுக்குமாறு மாணிக்கம் நாராயணனுக்கு நோட்டீஸ் அனுப்பினேன்.

ஆனால் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தன்னிடம் வேலை பார்க்கும் தணிகைவேலன் என்பவர் மூலம் எனது காசோலையை வங்கியில் போட்டு, சைதை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் செக் மோசடி வழக்கில் நான் சிக்கியிருப்பதாக என்னைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு தவறான தகவல் கொடுத்துள்ளார்.

கந்து வட்டி மூலம் பொது மக்களைத் துன்புறுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தும், மேற்படி தொழிலை அடியாள் மற்றும் பண பலத்துடன் செய்து வருகின்றனர்.

முக்கியமாக திரைப்படத்துறையினரைக் குறிவைத்து குறைந்த முதலீட்டில் பெரிய சொத்துக்களை அபகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஜி.வி. போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்டது கந்து வட்டி காரணமாகத் தான் என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்தது.

இப்போது அத்தகைய கொடுமைக்கு நானும் ஆளாகியுள்ளேன். என் மீது பொய் வழக்கு போட்ட மாணிக்கம் நாராயணன் மீது நானும் வழக்கு தொடர்வேன். முதல்வர், பத்திரிக்கைத் துறை, தொலைக்காட்சி மற்றும் நீதித்துறை ஆதரவுடன் எத்தகைய பிரச்சினையையும் எதிர்கொள்வேன்.

இவ்வாறு ரம்பா கூறியுள்ளார்.

ஒரு பைனான்சியரிடம் ரம்பா சிக்கித் தவித்து வருவதை நாம் சில தினங்களுக்கு முன் சுட்டிக் காட்டியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil