»   »  அஸ்ஸாமிலிருந்து அழகுடன் ..

அஸ்ஸாமிலிருந்து அழகுடன் ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஸ்ஸாம் தந்த அழகுப் பெண் ரிம்பி தாஸ், தமிழக ரசிகப் பெருமக்களின் மனதில் ரகளைப் புயலைக் கிளப்ப பாலி படம் மூலம் தயாராகி வருகிறார்.

தமிழ் சினிமா ஒரு அட்சயப் பாத்திரம் போல. எந்த ஊர் நடிகையாக இருந்தாலும் சரி அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாய்ப்புகளையும், கரன்சிகளையும் வாரி வழங்கும் கொடை வள்ளல்.

தெலுங்கிலிருந்தும், இந்தியிலிருந்தும், மலையாளத்திலிருந்தும் மாறி மாறி பல நடிகைகள் வந்து குவிந்தபோதிலும் எதையும் தாங்கும் இதயமாக கோலிவுட் கலக்கி வருகிறது.

இந்த நிலையில் வடகிழக்கில் உள்ள அஸ்ஸாமிலிருந்து அழகுப் புயலாக வந்திறங்கியுள்ளார் ரிம்பி தாஸ். எம்பி நிற்கும் அழகுடன், மனசுகளை நெம்பி எடுக்க வந்துள்ளார் இந்த ரிம்பி தாஸ்.

பாலி படம் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்கும் ரிம்பி, அஸ்ஸாமில் நடித்துக் கொண்டிருந்தவர். அங்கு பலவகையான கேரக்டர்களில் நடித்த அனுபவம் கொண்ட ரிம்பிக்கு, தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளதாம். இந்தியிலும் ஓரிரு படங்களை செய்துள்ளாராம்.

ஆரம்பத்தில் ஏர் ஹோஸ்டஸ் ஆக ஆசைப்பட்டாராம் ரிம்பி. ஆனால் திடீரென நடிப்புக்கு வந்து விட்டாராம். அவரது முதல் படம் மோனாட் பிரினியா ஜூய் (அப்படீன்னா இன்னாக்கா?)

பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே நடிகையாகி விட்ட பாக்கியவதி ரிம்பி. கதக்கில் நிபுணத்துவம் பெற்றி ரிம்பி பள்ளிப் படிப்பை முடித்து விட்டு நடித்துக் கொண்டே கல்லூரிப் படிப்பையும் முடித்து விட்டாராம்.

தமிழ் கூறும் நல்லுலகுக்கு வந்துள்ள அனுபவம் குறித்து ரிம்பியிடம் கேட்டபோது, தமிழ் திரையுலகும் ரொம்பப் பெரியது என்று எனக்குத் தெரியும். நாட்டிலேயே 2வது பெரிய திரைத் துறை தமிழ்தான்.

பல இந்தி நடிகைகள் கூட தமிழில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. பாலி படம் எனக்கு நிறைய அனுபவங்களைக் கொடுத்துள்ளது (ஆமாம், இயநக்குநருடன் ரிம்பிக்கு நல்ல அனுபவம் ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் போய் முடிந்ததாக கேள்வி!).

எனக்கு மொழிதான் பெரிய பிரச்சினை. மொழி தெரியாமல் ஒரு படத்தில் நடிப்பது என்பது சிரமமானது. தமிழில் உள்ள ஸ்கிரிப்ட்டை நான் அஸ்ஸாமியில் எழுதி, அதை மனப்பாடம் செய்துதான் வசனம் பேசி நடித்தேன்.

தமிழ் வார்த்தைகளை அஸ்ஸாமியில் எழுதி வைத்துக் கொண்டு தமிழ் கற்க முயற்சிக்கிறேன்.

அஸ்ஸாம் திரையுலகுக்கும், தமிழ் திரையுலகுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இங்கு எல்லாவற்றையுமே தொழில்ரீதியாக அணுகுகிறார்கள். படு வேகமாக செயல்படுகிறார்கள். இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

எனக்கு விதம் விதமான கேரக்டர்களில் நடிக்க ஆசையாக உள்ளது. நெகட்டிவாக நடிக்கவும் ஆசை, நகர்ப்புறப் பெண்ணாகவும், கிராமத்துப் பெண்ணாகவும் நடித்துக் கலக்க விருப்பமாக உள்ளேன்.

எனக்கு ராணி முகர்ஜியை நிறையப் பிடிக்கும். அவரது படங்கள் அனைத்தையும் நான் பார்த்துள்ளேன். ஒரு படத்தையும் விட மாட்டேன் என்றார் ரிம்பி.

ரிம்பியைத் தரிசிக்க தமிழ் சினிமாவின் ரசிகத் தம்பிகள் காத்திருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil