»   »  சலோனியின் தில்லுமுல்லு

சலோனியின் தில்லுமுல்லு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் ஆன கே.பாலச்சந்தரின் தில்லு முல்லு படத் தலைப்பில் புதிதாக ஒரு படம் உருவாகிறது. மதுரை வீரன் நாயகி சலோனி இதில் நடிக்கிறார்.

அந்தக் காலத்து ஹிட் படங்களை இந்தக் காலத்து டிரெண்டுக்கு ஏற்ப ரீமேக் செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக நான் அவனில்லை படம் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இந்த ஆர்வம், தமிழ் சினிமாக்கார்ரகளிடம் அதிகரித்து விட்டது.

அதேசமயம், அந்தக் காலத்து ஹிட் படங்களின் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு வேறு கதையைப் படமாக்கும் புதுப் பழக்கமும் ஒரு பக்கம் கிளம்பியுள்ளது.

தனுஷ் நடிக்க பொல்லாதவன் என்ற பெயரில் ஒரு படம் வளருகிறது. ரஜினியின் பொல்லாதவனுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல சரத்குமார் நடிக்க நம் நாடு, செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் என சில படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், ரஜினி நடித்த தில்லு முல்லு படத்தின் பெயரில் புதிதாக ஒரு படம் உருவாகவுள்ளது. இதில் சதீஷ் என்பவர் புதுமுக ஹீரோவாக அறிமுகமாகிறார். சதீஷ் பஹ்ரைனில் வேலை பார்த்து வருகிறார். ஆனால் பூர்வீகம் திருவாரூராம்.

சதீஷுடன் இணைந்து ஜே.க.ரித்தீஷ் நடிக்கிறார். ரித்தீஷை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரியும். சின்னி ஜெயந்த் இயக்கத்தில் கானல் நீர் என்ற படத்தில் நாயகனாக நடித்தவர்தான் ரித்தீஷ்.

அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரனான ரித்தீஷ், கானல் நீர் படத்தை ஓட வைப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரியாணி பொட்டலும், கையில் நூறு ரூபாய் நோட்டையும் கொடுத்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுத்தவர்.

ஆனாலும் படம் படு வேகத்தில் பொட்டிக்குத் திரும்பி விட்டது. இருந்தாலும் மனம் தளராத ரித்தீஷ் அடுத்துத் தன்னை வைத்து படம் எடுக்க யார் ரெடி என்று தீவிரமாக தேடி வந்தார். இந்த நிலையில்தான் தில்லுமுல்லு படம் வந்து அவரிடம் வசமாக சிக்கியுள்ளது.

இப்படத்தில் சாதிக்தான் நாயகன் என்றாலும் ரித்தீஷுக்குத்தான் முக்கியத்துவம் இருக்குமாம். காரணம் படத் தயாரிப்புச் செலவில் பெரும்பகுதியை இவரே ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் முக்கிய அம்சம் சலோனி. மும்பைக்கார சலோனி, மதுரை வீரன் படத்தில் ரமேஷுடன் ஜோடி சேர்ந்து நடித்து அறிமுகமானவர். முதல் படத்திலேயே கிளாமரில் சந்தோஷிக்க வைத்தவர்.

மதுரை வீரன் நன்றாக ஓடியும் கூட சலோனிக்கு சரிவர வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அப்செட்டில் இருந்த சலோனிக்கு தில்லுமுல்லு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

படத்தில் சலோனிக்கு கிளாமர் போர்ஷன்தான் ஜாஸ்தியாம். சலோனி தவிர இன்னொரு நாயகியும் இருக்கிறார். அவரைப் புதுமுகமாகப் போட தீர்மானித்து தேடி வருகிறார்களாம். குத்துப் பாட்டுக்கும் பிரபல நடிகை யாரையாவது போடலாம் என முடிவு செய்துள்ளனராம்.

காதல், கிளாமர், ஆக்ஷன், காமெடி என பலவித கலவையுடன் தில்லுமுல்லு ரசிகர்களை மிரட்ட வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil