வடக்கில் வாகை சூடும் தென்னிந்திய நடிகைகள்.. சமந்தா, நயன்தாரா, பிரியாமணிக்கு குவியும் வாய்ப்புகள்!
சென்னை: வைஜெயந்திமாலா, வாஹிதா ரஹ்மான், ஹேமா மாலினி, ரேகா மற்றும் ஸ்ரீதேவி என ஏகப்பட்ட தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் தங்கள் நாட்டியத் திறமையாலும் நடிப்புத் திறமையாலும் கலக்கி உள்ளனர்.
அந்த வரிசையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா, சமந்தா, பிரியாமணி, நித்யா மேனன் என பல முன்னணி நடிகைகள் பாலிவுட் படங்களை கைப்பற்றி வருகின்றனர்.
ஒரு எல்லையை கடந்து இன்னொரு எல்லைக்கு சென்று கொடி நாட்டுவது என்பது திறமை இருந்தால் மட்டுமே சாதிக்கக் கூடிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் பிரியாமணி
பருத்திவீரன் படத்தில் முத்தழகாக மிரட்டிய நடிகை பிரியாமணி பாலிவுட்டில் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ்களில் சுச்சி கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட பாலிவுட் ரசிகர்கள் மனங்களில் இடம்பெற்றுள்ளார்.

கீர்த்தி சுரேஷுக்கு பதில்
நடிகையர் திலகம் படத்தில் தேசிய விருது கிடைத்த உடனே அடுத்ததாக பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என நினைத்த கீர்த்தி சுரேஷுக்கு மைதான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்காக உடல் எடையை வெகுவாக குறைத்தார். ஆனால், கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு நடிகை பிரியாமணிக்கு சென்றது. அடுத்த ஆண்டு மைதான் திரைப்படம் திரைக்கு வருகிறது.

சமந்தாவின் சாம்ராஜ்யம்
தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் ராஜியாக நடித்து அசத்திய நடிகை சமந்தாவுக்கும் பாலிவுட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி விட்டனர். ஏற்கனவே சமந்தாவின் பல தென்னிந்திய படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு பாலிவுட் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த நிலையில், தி ஃபேமிலி மேன் 2 படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் சில படங்களில் சமந்தாவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

ஷாருக்கானுக்கு ஜோடி
சந்திரமுகியில் தொடங்கி தர்பார், அண்ணாத்த என தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக இயக்குநர் அட்லி இயக்கவுள்ள 'லயன்' எனும் படத்தில் நடித்து வருகிறார்.

கத்ரீனாவுடன்
முன்னதாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தொடங்கிய அழகு சாதன நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார். அப்போதே நயன்தாரா பாலிவுட்டில் ஒரு படம் பண்ணமாட்டாரா என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு ஷாருக்கானுடனே படம் பண்ணுகிறேன் என்கிற சூப்பர் அப்டேட்டை கொடுத்து குஷியாக்கி உள்ளார்.

ஸ்லிம்மா இருக்கணும்
பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்றாலே நடிகைகளுக்கு முதல் கண்டிஷன் அவர்கள் ஸ்லிம்மா இருக்கணும் எனும் எழுதப்படாத விதி அங்கே உள்ளதாக ஏகப்பட்ட நடிகைகள் புலம்பி உள்ளனர். தீபிகா படுகோன், ராதிகா ஆப்தே, ஸ்ருதிஹாசன், இலியானா என ஏற்கனவே ஏகப்பட்ட ஸ்லிம் தென்னிந்தியர்கள் பாலிவுட்டில் நடித்துள்ளனர். தற்போது சமந்தாவும் நயன்தாராவும் அநியாயத்துக்கு ஸ்லிம்மாக அதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

அடையாளம் கண்டுபிடிச்சுடுறாங்க
அக்ஷய் குமாரின் மிஷன் மங்கள் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த நடிகை நித்யா மேனன் பேட்டி ஒன்றில் கூறும் போது, தென்னிந்தியாவில் எந்த மாநிலத்தில் ஷூட்டிங் நடத்தினாலும் பிரைவசியே இருக்காது. ஆனால், வட இந்தியாவில் நம்மை யாரும் கண்டுக்கவே மாட்டாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனால், நண்பர்களுடன் வெளியே எங்கேயாவது சுற்றினால் உடனடியாக பலர் கண்டுபிடித்து ஓடி வந்து விடுகின்றனர். தென்னிந்திய மொழி படங்களை பாலிவுட் ரசிகர்கள் விரும்பி பார்ப்பதையே அது காட்டுகிறது எனக் கூறியிருந்தார். இன்னும் எத்தனை நடிகைகள் பாலிவுட் பக்கம் படையெடுத்து அங்கேயும் ஹிட் கொடுக்க காத்திருக்கின்றனர் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











