»   »  தேவதாசிகளின் தேவதைக் கதை ..

தேவதாசிகளின் தேவதைக் கதை ..

Subscribe to Oneindia Tamil

தேவதாசிகளின் கதையை அழகாக விளக்கும் படம் தனம். இதில் தேவதாசிகளின் பின்னணி சோகத்தை சங்கீதாவின் ரூபத்தில் அழகாக வெளிக்காட்டியிருக்கிறாராம் புதுமுக இயக்குநர் சிவா.

தேவதாசிகள் முறை இன்று நாட்டில் இல்லை. ஆனால் அந்தக் காலத்தில் தேவதாசிகள் எப்படிப் பார்க்கப்பட்டார்கள், எப்படி அணுகப்பட்டார்கள், எப்படி மதிக்கப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சபிக்கப்பட்ட அந்தப் பெண்களின் பிரச்சினைகளை யாரும் நல்ல எண்ணத்துடன், சரியான கோணத்துடன் பார்த்ததில்லை. அவர்களை செக்ஸ் பொம்மைகளாகவும், உடல் வேட்கையைத் தீர்க்கும் தாக சாந்தியாகவும்தான் பார்த்தார்கள். ஆனால் இயக்குநர் சிவா, உடல் சுகத்திற்காக நேர்ந்து விடப்பட்ட இந்தப் பெண்களின் கதையை அனுதாபத்துடன் தனது தனம் படத்தில் பார்த்துள்ளார்.

ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரும் தனம் படம், மிகச் சிறந்த கலைஞர்களின் கைவண்ணத்தில் அருமையாக உருவாகியிருக்கிறதாம். பிதாமகனில் கஞ்சா பெண்ணாக வந்து, உயிர் படத்தில் காம இச்சையை வெளிப்படுத்தும் அண்ணி அருந்ததியாக அசத்திய சங்கீதா, தனம் படத்தில் தேவதாசிப் பெண்ணாக வந்து சிறப்பாக நடித்துள்ளாராம்.

இளையராஜா இசையமைத்துள்ளார். ஜீவா கேமராவைக் கையாண்டுள்ளார். தோட்டாதரணி கலையைக் கவனித்துள்ளார். படத்திற்கு எடிட்டிங் லெனின்.

தனம் படம் குறித்து இயக்குநர் சிவா கூறுகையில்,

இது ஒரு விபச்சாரியின் கதை என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. தேவதாசி முறையை அடிப்படையாகக் கொண்ட கதை இது என்றாலும் கூட, அந்தப் பிரச்சினைக்குள் நான் முழுமையாக செல்லவில்லை.

இது முற்றிலும் வித்தியாசமான கதை. ஒரு பெண் விபச்சாரியாக இருந்தால் அவரது மகளும் விபச்சாரியாகத்தான் இருக்க வேண்டும் என்பது சமூகத்தின் எண்ணம். அந்த வழக்கத்திலிருந்து வெளியே வர அந்தப் பெண் விரும்பினாலும், மதிக்கத்தக்க ஒரு வாழ்க்கையும் அங்கீகாரமும் அந்த விபச்சாரப் பெண்ணின் மகளுக்குக் கிடைப்பதில்லை.

விபச்சாரப் பெண்ணின் மகளாக வரும் எனது நாயகி சங்கீதா, சமூகத்தின் இந்த முட்டுக்கட்டைகளை எப்படி சமாளிக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் தனம் படத்தின் கதை.

உயிர் படத்திற்கு முன்பே இந்த படத்தை சங்கீதா ஒத்துக் கொண்டு விட்டார். எனவே உயிர் படத்தினால் சங்கீதாவுக்குக் கிடைத்த புகழை நாங்கள் எங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முயன்றோம் எனக் கூற முடியாது.

இந்தப் படத்தில் சங்கீதாவுக்கு நடிப்பதற்கு அருமையான வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். அவரும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

படத்தின் 70 சதவீத பணிகள் முடிந்து விட்டன. மீதமுள்ள பகுதியும் ஜூலை மாதத்திற்குள் முடிந்து விடும் என நம்புகிறேன். ஆகஸ்ட் 15ம் தேதி படம் ரிலீஸாகும். ஜூலை முதல் வாரத்தில் பாடல்கள் வெளியிடப்படும் என்றார் சிவா.

சங்கீதா இதில் சிறப்பாக நடித்துள்ளார் என்று கூறினாலும் கூட சங்கீதாவின் கிளாமர் போஸ்களும், கலக்கல் கவர்ச்சிக் காட்சிகளும் படத்திற்கு வேறு முலாமை பூசுவதாக உள்ளது.

படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளதாம். அவற்றில் பெரும்பாலானவை பதிவாகி விட்டது. அனைத்துப் பாடல்களையும் வாலிபக் கவி வாலி எழுதியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் முழுப் படத்திற்கான பாடல்களையும் வாலி எழுதியுள்ளார்.

அதேபோல மிகச் சிறந்த நடிகரும், தேசிய விருது பெற்றவருமான கர்நாடகத்தின் கிரீஷ் கர்னாட் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்துள்ளார்.

இவர்கள் தவிர கருணாஸ், இளவரசு, கிரேன் மனோகர், சிசர் மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர். நான்கு பேரும் சேர்ந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனராம்.

தனம், தரமாக இருக்கும் என நம்புவோம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil