என் மகனை டைவர்ஸ் செய்யப்போறியா?.. சங்கீதாவிடம் நேரடியாகவே கேட்ட மாமியார்.. டென்ஷனான நடிகை
சென்னை: தமிழில் பிதாமகன் படத்தில் நடித்து வெகு பிரபலமடைந்த சங்கீதா பின்னணி பாடகர் க்ரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். சந்தோஷமாக அவர்களது திருமண வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும் நிலையில் இரண்டு பேரும் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கேரள திரையுலகத்தில் தனது நடிப்பு பயணத்தை 90களில் தொடங்கியவர் சங்கீதா. அவருக்கு அங்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததால் தொடர்ந்து பிஸியாக நடிக்க ஆரம்பித்தார். மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்த அவர்; தமிழிலும் அறிமுகமானார். தமிழிலும் முதல் படமே அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்த சங்கீதாவுக்கு கோலிவுட்டைவிடவும் டோலிவுட்டில் மார்க்கெட் உயர்ந்தது.
பிதாமகன் சங்கீதா: அதனால் அந்த திரைத்துறையில் மட்டும் அதீத கவனம் செலுத்திவந்தார். அங்கு முன்னணி ஹீரோக்கள், இளம் ஹீரோக்கள் என ரவுண்டு கட்டி நடித்த அவர்; ஏகப்பட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். அப்படி ஒரு விருது பெற்ற சமயத்தில்தான் இயக்குநர் பாலாவுடம் தொலைபேசியில் பேசும் சந்தர்ப்பம் அமைய; பிதாமகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சங்கீதாவுக்கு கிடைத்தது.

போல்டான நடிகை: அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதிலிருந்து சங்கீதா என்ற பெயருக்கு முன்பு பிதாமகன் பெயரும் ஒட்டிக்கொண்டது. எனவே பிதாமகன் சங்கீதா என்றே இன்றும் அழைக்கப்படுகிறார். அப்படத்தில் அவர் ஏற்றிருந்தது போல்டான கதாபாத்திரம். அந்த படத்துக்கு பிறகு உயிர், தனம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இரண்டு படங்களிலுமே அவர் தைரியமாக நடித்திருந்தார். நடித்தது மட்டுமின்றி அனைவரிடமும் பாராட்டையும் பெற்றார்.
கிரிஷ்ஷுடன் திருமணம்: சூழல் இப்படி இருக்க பின்னணி பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சங்கீதா. அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தங்களது திருமண வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திக்கொண்டிருக்கும் நிலையில்; இரண்டு பேரும் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. அதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அய்யய்யோ சங்கீதாவுக்கும் டைவர்ஸ்ஸா? இது என்ன கோலிவுட்டில் விவாகரத்து சீசனா என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
விளக்கம் கொடுத்த சங்கீதா: இந்த வதந்தி பரவி நின்றுவிடும் என்று சங்கீதா எதிர்பார்த்திருந்தார். ஆனால் நாளுக்கு நாள் அது தீவிரமடைந்தது. எனவே இனியும் மௌனம் சாதித்தால் நன்றாக இருக்காது என முடிவெடுத்த அவர்; தன்னை பற்றி வந்த விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
சங்கீதா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நான், கணவர், குழந்தை தனியாக இருந்தாலும் எனது மாமியார் தினமும் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார். அப்படி ஒருமுறை வரும்போது, நீ என் மகனை டைவர்ஸ் செய்யப்போறியா என்று கேட்டார். அதிர்ச்சியான நான், 'ஏன் மா இப்படி கேட்கிறீர்கள்' என கேட்டேன். இல்லை பத்திரிகைகளில் எல்லாம் போடுகிறார்கள் என சொன்னார். உடனே கோபமான நான், 'யாரோ ஒருத்தன் எங்கிருந்தோ தனது கற்பனையை எழுதிக்கொண்டிருக்கிறான். நீங்கள் தினமும் வீட்டுக்கு வருகிறீர்கள். பார்க்கிறீர்கள். அவன் எழுதியதையா நம்புகிறீர்கள் என கேட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











