»   »  இந்தியில் ஸ்ரேயா

இந்தியில் ஸ்ரேயா

Subscribe to Oneindia Tamil

ஆசின், திரிஷாவைத் தொடர்ந்து தமிழில் இருந்து இன்னொரு நாயகி இந்திக்குப் போகிறார்.

ஆசின் கேரளத்தைச் சேர்ந்தவர், திரிஷா நம் ஊர்க்காகர். ஸ்ரேயா மும்பைக்கார பெண் தான். ஆனாலும் மும்பையில் மாடலிங் செய்து கொண்டே பாலிவுட்டில் சான்ஸ் தேடியும் சினிமா வாய்ப்பு அவருக்குக் கிட்டவே இல்லை.

இதையடுத்து தெற்கே படையெடுத்தவர். முதலில் ஹைதராபாத்தில் லேண்ட் ஆகி தெலுங்கில் கண்ணாபின்னா கவர்ச்சி காட்டி ஒரு இடத்தைப் பிடித்தார். அதன் பின் இவரை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண் தமிழுக்குக் கொண்டு வந்தார்.

அவர் தயாரித்து ஊத்திக் கொண்ட படமான மழை தான் ஸ்ரேயாவின் முதல் தமிழ்ப் படம். அந்தப் படம் முழுக்க மழையில்,நைஸ் புடவையில் ஆட்டமாய் ஆடி கோலிவுட்டில் ஈரம் பதித்தார்.. ஸாரி கால் பதித்தார்.

அடுத்தடுத்து சில படங்களில் நடித்தாலும் அவர் தங்கியிருந்த ஹோட்டலின் சீலிங்கைப் பொத்துக் கொண்டு சிவாஜி பட சான்ஸ் வந்தது. இந்த வாய்ப்பைப் பிடிக்க த்ரிஷா, ஆசின் ஆகியோர் தலைகீழாக நின்று பார்த்தும் யாரும் எதிர்பாராமல் ஸ்ரேயாவுக்கு அந்த வாய்ப்பு போனது.

ரஜினியோடு ஜோடி போட்ட நேரமோ என்னவோ ஸ்ரேயா கட்டில் அடை மழை. தமிழிலும், தெலுங்கியிலும் அவரை இழுக்க போட்டா போட்டி நடந்து வருகிறது. ஆனால், அவரை இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த இந்தியும் தேடி வந்து சான்ஸ் கொடுத்திருக்கிறது.

தமிழில் அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக கந்தசாமியில் கதாநாயகியாக நடிக்கும் ஸ்ரேயா தமிழ், தெலுங்கிலும் மேலும் மேலும் சில படங்களுக்கு அட்வான்ஸை வாங்கிப் போட்டுள்ளார்.

இந் நிலையில் தெலுங்கில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வெளியான அத்தடு என்ற படம் (தமிழில் நந்து என ரிலீஸாகி படுத்துக் கொண்டது) தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது.

ஏக் என பெயரில் உருவாகும் இந்தப் படத்தில் ஸ்ரேயாவை ஹீரோயினாக்கியிருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஹீரோ பாபி தியோல். அத்தடுவில் இந்த ரோலை செய்தது மாமி திரிஷா.

நானா படேகர் சிபிஐ அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தை கேமராமேன் சந்தோஷ் சிவனின் சகோதரர் சங்கீத் இயக்குகிறார். பருத்திவீரன் படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி தான் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

பஞ்சாப்பை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஏக் தம்மில் சூட்டிங்கை முடித்து நவம்பர் மாதத்தில் படம் திரைக்கு வரப் போகிறதாம்.

Please Wait while comments are loading...