»   »  ஸ்னேகா படம்-விலக்கு கிடைக்குமா?

ஸ்னேகா படம்-விலக்கு கிடைக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மம்முட்டி, சினேகா நடிக்க மறுமலர்ச்சி ஹென்றி தயாரிப்பில் உருவாகும் வந்தே மாதரம் படத்தின் தலைப்பு தமிழ் இல்லை, எனவே தமிழக அரசின் வரிச் சலுகை கிடைக்காது என்று கூறப்படுவதால் பெயரை மாற்றி விடலாமா என இயக்குநர் யோசித்து வருகிறாராம்.

மம்முட்டி நீண்ட நாளைக்குப் பிறகு தமிழில் நடிக்க வருகிறார். கட்டக் கடைசியாக அவர் நடித்தது ஜூனியர் சீனியர். இப்படத்தில் முன்னாள் ஸ்டைல் மன்னன் ரவிச்சந்திரனின் மகன் அம்சவிர்தனுடன் இணைந்து நடித்திருந்தார் மம்முட்டி.

மெகா ஸ்டாராக இருந்தபோதிலும் எளிமையாக (ரொம்ப காலமாக மலபார் பீடிதான் குடித்துக் கொண்டிருக்கிறாராம்) இருக்கும் மம்முட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கே நிரந்தரமாக குடி வந்து விட்டார். இருந்தாலும் நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

அதற்கு நேர் மாறாக மலையாளத்தில் அடுக்கடுக்காக ஹிட் படங்களைக் கொடுத்து வந்தார். இந்த நிலையில்தான் மறுமலர்ச்சி படத் தயாரிப்பாளர் (இதிலும் மம்முட்டிதான் நாயகன்) ஹென்றி புதிதாக இயக்கப் போகும் படத்துக்கு மம்முட்டியை நடிக்கக் கூப்பிட்டார். மறுக்காமல் ஒப்புக் கொண்டார் மம்முட்டி.

மணிரத்தினத்தின் உதவியாளரான கார்த்திக்தான் இப்படத்தை இயக்கப் போகிறார். காவல்துறை அதிகாரி வேடமாம் மம்முட்டிக்கு. அவருக்கு ஜோடி போடுபவர் சினேகா. பைலட்டாக நடிக்கிறாராம் சினேகா. இதற்காக அவருக்கு சிறப்பு மேக்கப்பும், பயிற்சியும் கொடுக்கப்படவுள்ளதாம். வித்யாசாகர் இசையமைக்கிறார்.

ஒரே நேரத்தில் தமிழிலும், மலையாளத்திலும் படத்தை உருவாக்குகிறார்கள். இங்குதான் சிக்கல் வந்தது. வந்தே மாதரம் என்ற பெயர் தமிழ் அல்ல, சமஸ்கிருதம், எனவே வந்தே மாதரம் என்ற பெயரில் தமிழில் படத்தை வெளியிட்டால் வரிச் சலுகை கிடைக்காது என்று சிலர் கிளம்பியுள்ளனராம்.

இதனால் இயக்குநரும், தயாரிப்பாளரும் குழம்பி விட்டனர். வந்தே மாதரம் என்ற சொல் நாடு முழுவதும் ெமாழிக் குழப்பமின்றி உச்சரிக்கப்படும் ஒரு சொல். அதை வரிச் சலுகைக்காக மாற்ற வேண்டுமா என்ற குழப்பம் அவர்களுக்கு.

இருந்தாலும் டைட்டிலை மாற்றி விடலாம், பிரச்சினை எதற்கு என்று தயாரிப்பாளர் இப்போது அபிப்ராயப்படுகிறாராம். இதனால் வந்தே மாதரம் பெயர் மாறக் கூடுமாம்.

ஏற்கனவே சரத்குமாருடன் இணைந்து பழசி ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. மலையாளத்தில் தயாராகி வரும் இப்படம் தமிழிலும் வரப் போகிறது. இப்போது வந்தே மாதரமும் ரெடியாகிறது.

படம், சம்மட்டி அடியாக இல்லாமல் நெத்தியடியாக இருந்தா சரிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil