»   »  மீண்டும் கமல், ஸ்ரீதேவி ஜோடி

மீண்டும் கமல், ஸ்ரீதேவி ஜோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் பி.வாசுவின் படம் மூலம் இணையவுள்ளனர்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட, ரசிக்கப்பட்ட ஜோடிகளில் கமல், ஸ்ரீதேவியும் முக்கியமானவர்கள். 80களில் ராசியான ஜோடியாக பேசப்பட்டவர்கள் கமலும், ஸ்ரீதேவியும்.

இருவரும் முதல் முறையாக 16 வயதினிலே படத்தில் இணைந்தனர். அதன் பின்னர் சிவப்பு ரோஜாக்கள், வாழ்வே மாயம், மூன்று முடிச்சு, மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, குரு, வறுமையின் நிறம் சிகப்பு என ஏகப்பட்ட படங்களில் ஜோடி போட்டனர்.

இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் படங்களாகும். பின்னர் ஸ்ரீதேவி தமிழிலிருந்து இந்திக்குப் போனார். மூக்கை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு இந்திக்குப் போன ஸ்ரீதேவி தமிழைப் போலவே இந்தியிலும் கலக்கி அகில இந்திய ஸ்டார் ஆனார்.

இந்தியில் பீல்ட் அவுட் ஸ்டேஜை நெருங்கியபோது நடிகர் அனில் கபூரின் அண்ணன் போனி கபூரை கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானார்.

திருமணத்திற்குப் பின்னர் நடிப்பை முழுமையாக விட்டு விட்டார். இடையில் டிவி சீரியலில் தோன்றினார். அவ்வப்போது விளம்பரங்களில் வந்து போனார். அந்த அளவிலேயே அவரது கலையுலக தொடர்புகள் இருந்தன.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சந்திரமுகி படத்தின் 804வது நாள் விழாவுக்கு தனது மகளுடன் (அப்படியே அம்மா சாயல்) வந்திருந்தார் ஸ்ரீதேவி.

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் செளந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோருக்கு நடுவில் அமர்ந்து நிகழ்ச்சியைக் கண்டுகளித்தார். இதே விழாவுக்கு கமல்ஹாசனும், பி.வாசுவும் கூட வந்திருந்தனர்.

விழாவின்போது ஸ்ரீதேவியை சந்தித்தார் பி.வாசு. இருவரும் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின்போது பழகிய நாட்களை பகிர்ந்து கொண்டனர். அந்தப் படத்தை இயக்கியவர் ஸ்ரீதர். அவரிடம் அப்போது உதவியாளராக இருந்தவர் பி.வாசு என்பது குறிப்பிடத்தக்கது.

கமலை வைத்து தான் அடுத்து இயக்கப் போகும் படத்தில் நீங்களும் நடிக்க வேண்டும் என்று அப்போது கேட்டாராம் வாசு. அதை உடனடியாக ஏற்றுக் கொண்டாராம் தேவி. அதேபோல, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் ஓ.கே.சொல்லி விட்டாராம்.

வெற்றிக் கொடி நாட்டிய கமல், ஸ்ரீதேவி ஜோடி 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையவிருப்பதால் இருவரது ரசிகர்களும் குஷியாகியுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil