»   »  இந்தியிலும் ஸ்ருதி ஹாசன்

இந்தியிலும் ஸ்ருதி ஹாசன்

Subscribe to Oneindia Tamil
Sruthihasan
கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தமிழில் நடிக்கவுள்ள அதே நேரத்தில், இந்தியிலிலும் கால் பதிக்கிறார். வாசு பக்னானி தயாரிப்பில் உருவாகும் கல் கிஸ்னே தேகா என்ற படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் ஸ்ருதி.

20 வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஸ்ருதி, இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இசையமைப்பாளராகத்தான் அவர் பிரமாதப்படுத்தப் போகிறார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் பலரும் அவரை நடிக்க வைக்க முயன்றனர்.

ஒரு கட்டத்தில் நடிப்புக்கு சம்மதம் சொல்லாமல் மறுத்துக் கொண்டிருந்தார் ஸ்ருதி. இந்த நிலையில்தான் சமீபத்தில் நடிப்புக்கும் அவர் பச்சைக் கொடி காட்டினார்.

மாதவனுடன் ஜோடி சேர்ந்து அவர் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இந்தியிலும் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

வாசு பக்னானியின் தயாரிப்பில் உருவாகவுள்ள கல் கிஸ்னே தேகா என்ற படத்தில் ஸ்ருதி ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர், வாசுவின் மகன் ஜாக்கி பக்னானி. இது ஜாக்கிக்கும் முதல் படம்.

இந்தப் படம் ரொமான்டிக் இசைப் படமாகும். முதல் படத்திலேயே மகனை உச்சத்திற்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளாராம் வாசு. ஜாக்கி, ஸ்டண்ட் துறையில் பல புரட்சிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் லேவிட்டேஷன் நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்.

விவேக் சர்மா இப்படத்தை இயக்கவுள்ளார். சாஜித் - வாஜித் இயைமைக்கவுள்ளனர்.

தனது புதிய படம் குறித்து வாசு பக்னானி கூறுகையில், ஸ்ருதியுடன் இதுதொடர்பாக பேசியுள்ளேன். நடிப்பதற்கு அவர் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் படத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார் வாசு.

கமல்ஹாசன் 10 வேடங்களில் அசத்தியுள்ள தசாவதாரத்தில், மல்லிகா ஷெராவத் ஆடியுள்ள ஒரு பாட்டுக்கு ஸ்ருதி குரல் கொடுத்துள்ளார். தேவர் மகன் படத்தில்தான் முதன் முதலில் ஸ்ருதி பாடினார். தொடர்ந்து கமல்ஹாசனின் சில படங்களில் பாடியுள்ளார். பாடல்களும் எழுதியுள்ளார்.

தற்போது ஒரு இசை ஆல்பத்தையும் ஸ்ருதி உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்த ஆல்பம் வருவதற்கு முன்பாகவே மாதவனுடன் அவர் நடிக்கப் போகும் தமிழ்ப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்ப் படத்தை நிஷிகாந்த் காமத் இயக்கவுள்ளார். ஞானம் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

தந்தை வழியில் தமிழிலும், தாய் வழியில் இந்தியிலும் ஒரே நேரத்தில் கால் பதிக்கும் ஸ்ருதி, தந்தை வழியில் இரு மொழிகளிலும் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil