»   »  சுஜாதாவின் 'ஆனந்த தாண்டவம்'

சுஜாதாவின் 'ஆனந்த தாண்டவம்'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Tamana with Siddharth
எழுத்தாளர் சுஜாதா எழுதிய சூப்பர் ஹிட் நாவலான 'பிரிவோம் சந்திப்போம் ' இப்போது திரைப்படமாகிறது.

'ஆனந்த தாண்டவம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வசனங்களையும் மூலக்கதைக்குச் சொந்தக்காரரான சுஜாதாவே எழுதுகிறார்.

கரு.பழனியப்பன் இயக்கத்தில் தற்போது 'பிரிவோம் சந்திப்போம்' எனும் பெயரில் ஒரு படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தத் தலைப்பை தன் படத்துக்கு வைக்கும் முன் சுஜாதாவிடம் முறையான அனுமதி பெற்றுக் கொண்டார் பழனியப்பன்.

அப்போது 'பிரிவோம் சந்திப்போம்' நாவலை படமாக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை. எனவே எந்த மறுப்பும் சொல்லவில்லை.

கரு.பழனியப்பனின் படம் தொடங்கிய பிறகுதான், ஒரிஜினல் கதையை சினிமாவாக்கும் தனது திட்டத்தை சுஜாதாவிடம் தெரிவித்துள்ளார் இயக்குநர் காந்தி கிருஷ்ணா. பிறகுதான் அடடா.. அருமையான தலைப்பை இழந்துவிட்டோமே என்று தவித்திருக்கிறார்கள்.

வேறு வழியின்றி புதிய படத்துக்கு 'ஆனந்த தாண்டவம்' எனப் பெயரிட்டுள்ளனர்.

சித்தார்த் எனும் புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு இணையாக நடிப்பவர் கல்லூரி படம் மூலம் இளைர்களின் இதயங்களை வென்ற தமன்னா.

முதல் கட்டப் படப்பிடிப்பு ஊட்டி, குற்றாலம், அம்பை மற்றும் பாபநாசத்தின் அழகு கொஞ்சும் பகுதிகளில் படமாகிறது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடக்கிறது.

'பிரிவோம் சந்திப்போம்' நாவல் எண்பதுகளின் ஆரம்பத்தில் ஆனந்த விகடன் இதழில் தொடராக வந்தது. தமிழ்ப் பத்திரிகை வரலாற்றிலேயே முதல் முறையாக தொடர் ஒன்றுக்கு அண்ணாசாலையில் கட் அவுட் வைக்கப்பட்டது (சுஜாதா படத்துடன்) இந்த நாவலுக்குத்தான்.

இளமையும் குறும்பும் துள்ளும் இந்த காதல் கதை இரு பாகங்களாக வெளிவந்தது. முதல் பாகம் முழுக்க முழுக்க அம்பையிலும் பாபநாசத்திலும் நடக்கும். இரண்டாம் பாக கதை முழுக்க அமெரிக்காவில் நடக்கும்.

இப்படம் குறித்து சுஜாதாவிடம் கேட்டபோது, "பிரிவோம் சந்திப்போம் நாவல் எனது ஆரம்ப கட்ட எழுத்துக்களில் மிக இனிமையானது என்ற பெயரைப் பெற்றது. எல்லா இளைஞர்களுக்குள்ளும் பொங்கித் ததும்பும் காதலையும் அதன் வலிகளையும், காதலில் தோற்றாலும் அதுவே வாழ்வின் கடைசி அல்ல என்பதையும் சொன்ன கதை அது. நிறைய பேர் மனதில் பசுமையாக நின்று விட்ட கதை. அந்தப் பசுமை மாறாமல் திரையிலும் பதிவு செய்யும் முயற்சி நடக்கிறது" என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil