»   »  தூள் கிளப்பிய திரிஷா

தூள் கிளப்பிய திரிஷா

Subscribe to Oneindia Tamil

அரசியல்வாதிகளுக்கு சற்றும் சளைக்காமல் நடிகை திரிஷா தனது பிறந்த நாளை படு ஆரவாரமாக கொண்டாடி அசத்தினார். அத்தோடு திரிஷா பவுண்டேஷன் என்ற புதிய அறக்கட்டளையையும் அவர் தொடங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கியவர் திரிஷாதான். கடந்த ஆண்டு இந்த ரசிகர் மன்றம் படு கோலாகலமாக தொடங்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு தனது பிறந்த நாளை திரிஷா படு ஆரவாரமாக கொண்டாடினார் திரிஷா.

நேற்று திரிஷாவுக்கு பிறந்த நாள். இதையொட்டி பேட்ரீஷியன் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், திரிஷா பவுண்டேஷன் என்ற புதிய அறக்கட்டளையைத் தொடங்கினார் திரிஷா.

திரிஷா வருகையையொட்டி அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. ஒரு திராவிடக் கட்சியின் தலைவர் யாராவது வந்தால் எப்டி அமர்க்களப்படுமோ அந்த அளவுக்கு திரிஷாவை வரவேற்று போஸ்டர்கள், பேனர்கள் என கலக்கி விட்டனர் அவரது ரசிகர்கள். கல்லூரி வளாகம் முழுவதும் கலர் பேப்பர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காலை 10.30 மணிக்கு அம்மா உமா கிருஷ்ணனுடன் ஒய்யாரமாக வந்து இறங்கினார் திரிஷா. அடுத்த கூத்து அப்புறம்தான் நடந்தது. ஒரு வயதான பெரியவர், திரிஷா காலில் விழுந்து எழுந்து ஒரு மனுவைக் கொடுத்தார். திரிஷாவும் பழுத்த அரசியல்வாதி போல அதை வாங்கிப் பார்த்து விட்டு அருகே இருந்த உதவியாளரிடம் கொடுத்து ஆவண செய்வதாக கூறி விட்டு அகன்றார்.

பின்னர் திரிஷா பவுண்டேஷனை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் திரிஷா. தனது ரசிகர் மன்றம் மற்றும் பவுண்டேஷனின் இணையதளங்களையும் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் ரத்ததான முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. ரத்த தானம் செய்த 500 பேருக்கு திரிஷா சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் அவர் வழங்கினார்.

அதன் பின்னர் புற்று நோய் மருத்துவமனைக்குச் சென்றார் திரிஷா. அங்குள்ள குழந்தைகளைச் சந்தித்த அவர் குழந்தைகளுக்கு சாக்லேட், கேக் உள்ளிட் இனிப்புகளையும், பூக்களையும் வழங்கினார். சில குழந்தைகளுக்கு அவரே கேக் ஊட்டி விட்டார்.

திரிஷாவைப் பார்க்க கூட்டம் அலைமோதியது. அவர்களை ரசிகர் மன்றத்தினர் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினர்.

அத்தனை களேபரங்களும் முடிந்த பின்னர் திரிஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுதான் எனது வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள். எனது ரசிகர் மன்றத்தினரை உருப்படியான வழியில் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்.

ஏழைகளுக்கும், தேவைப்பட்டவர்களுக்கும் உதவுமாறு அவர்களை அறிவுறுத்தியுள்ளேன். பாலாபிஷேகம் செய்வது, கட் அவுட் வைப்பது, கொடி கட்டுவது அவசியமற்றது என்பதையும் அவர்களுக்குச் சொல்லியுள்ளேன்.

எனது ரசிகர் மன்றத்தைப் பயன்படுத்தி நான் அரசியலுக்கு நுழையப் போவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது தவறு, அடிப்படை இல்லாத தகவல். அரசியல் குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை.

ஆனால் அரசியலில் நுழையாமலேயே என்னால் மக்களுக்கு நிறையச் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கப் போகிறேன். அதற்காகத்தான் பவுண்டேஷனை ஆரம்பித்துள்ளேன் என்றார் திரிஷா.

பின்னர் சினிமா பற்றி பேச்சு திரும்பியது. ரஜினியின் அடுத்த படத்தில் நீங்கள்தான் ஹீரோயினா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இப்போது வரை அவை வதந்திகளாகத்தான் உள்ளன. அதுபற்றி எனக்குத் தெரியாது. சூப்பர் ஸ்டாரிடமிருந்து இதுவரை எந்த தகவலும் எனக்கு வரவில்லை.

நான் இப்போது பீமா, கிரீடம் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். வேறு புதிய படங்கள் எதையும் ஒத்துக் கொள்ளவில்லை என்றார் திரிஷா.

ரசிகர் மன்றத்தினர் தங்களது தங்கத் தலைவியின் பிறந்த நாளை கொண்டாடிய விதத்தைப் பார்க்கும்போது திரிஷா புதிய பாதையில் அடியெடுத்து வைப்பதையே உணர்த்தியுள்ளது. நகர் முழுவதும் பிரமாண்ட சைசால் ஆன போஸ்டர்கள், கட் அவுட்கள், பேனர்கள் என அசத்தி விட்டனர் அசத்தி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil