»   »  ரஜினியின் நாயகியாகிறார் திரிஷா

ரஜினியின் நாயகியாகிறார் திரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாம் முன்பே சொல்லியது போல ரஜினிகாந்த்தின் அடுத்த நாயகியாகும் வாய்ப்பு திரிஷாவுக்கு பிரகாசமாகியுள்ளது. இதனால் தன்னைத் தேடி வருகிற புதிய படங்களை நிராகரிக்க ஆரம்பித்துள்ளாராம் திரிஷா.

சிவாஜியை சிறப்பாக முடித்து விட்டு, ஹிஸ்டாரிகல் ஹிட்டுக்காக காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது அடுத்த படத்தை கவிதாலயா மற்றும் சத்யா மூவிஸுக்கு இணைந்து வழங்கவுள்ளார். இவர்கள் தவிர பஞ்சு அருணாச்சலத்தையும் தயாரிப்பில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளார்

தனது அடுத்த படத்தின் மூலம் கே.பாலச்சந்தர், ஆர்.எம்.வீரப்பன், பஞ்சு அருணாச்சலம் ஆகியோரை கெளரவிக்கும் திட்டத்தில் உள்ளார் ரஜினி. அதனால்தான் இந்த மூன்று பேரையும் தனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர்களாக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

ரஜினியின் அடுத்த படத்தை அவருக்கு மிகவும் பிடித்த கே.எஸ்.ரவிக்குமார் அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரில் ஒருவர் இயக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்தோஷ செய்தியை கடந்த வாரமே திரிஷாவிடம் ரஜினியே சொல்லி விட்டாராம். அடுத்த படத்துக்கு தயாராக இருங்கள் என்று ரஜினியே சொல்லி விட்டதாக தெரிகிறது.

இதைக் கேட்டது முதல் திரிஷா, தரையிலிருந்து பத்து அடி மேலேதான் மிதந்து கொண்டிருக்கிறாராம். ரஜினி படத்தில் நடிப்பதற்காக தான் ஏற்கனவே ஒத்துக் கொண்ட படங்களை வேண்டாம் என்று சொல்ல ஆரம்பித்துள்ளாராம்.

விஜய் நடிக்க, தரணி இயக்க, மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரிக்கும் படத்திலிருந்து முதல் காரியமாக வெளியேறியுள்ளாராம். தெலுங்கிலும் கூட புதிய பங்களை ஒத்துக் கொள்ளவில்லையாம்.

ரஜினி மேட்டர் குறித்து திரிஷாவிடம் மெய்யாலுமா என்று கேட்டபோது, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. எனது அடுத்த படம் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை.

தமிழில் நான் இரண்டு படங்களை ஒப்புக் கொண்டுள்ளேன். இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள். எனது சினிமா கேரியரையே நிர்ணயிக்கப் போகும் படங்கள் அவை.

விஷாலுடன் நடிப்பதாக இருந்த படத்திலிருந்து (மலைக்கோட்டை) நான் விலகிக் கொண்டு விட்டேன். கால்ஷீட் கொடுக்க முடியாததே இதற்குக் காரணம் என்றார் திரிஷா.

விஷால் படம் மட்டுமல்ல, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடிக்க வந்த (சங்கர்தாதா ஜிந்தாபாத்) படத்தையும் கூட திரிஷா நிராகரித்து விட்டாராம். அதேபோல சூர்யவின் வேல் படத்திலும் நடிக்க இயலாது என்று கூறி விட்டாராம்.

உண்மையில் ரஜினி படத்துக்காகத்தான் இப்படி விலகல் முடிவை எடுத்துள்ளாராம் திரிஷா. இப்போதைக்கு திரிஷா கையில் புதிதாக படம் ஏதும் இல்லையாம். பீமா படத்துக்காக சில காட்சிகளில் நடித்துக் கொடுக்க வேண்டியுள்ளதாம். அதையும் கூட வேகமாக எடுத்து முடிக்குமாறு கோரியுள்ளாராம்.

சூப்பர் ஸ்டாருடன் இணையப் போகும் சந்தோஷத்தில் இப்போதே ஆயத்தமாக ஆரம்பித்து விட்டார் திரிஷா என்கிறார்கள்.

உண்மையிலேயே சூப்பர் ஸ்டாருடன் இணையும் வாய்ப்பு கிடைத்தால் கிழக்குக் கடற்கரைச் சாலை ரெண்டு பட்டாலும் படலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil