»   »  திரிஷாவும் இந்திக்கு ..

திரிஷாவும் இந்திக்கு ..

Subscribe to Oneindia Tamil

ஆசினைத் தொடர்ந்து திவ்ய தேவதை திரிஷாவும் இந்திக்குத் தாவுகிறார்.

தென்னிந்திய திரைத் தாரகைகளில் பட்டொளி வீசிப் பறப்பவர்கள் ஆசினும், திரிஷாவும். இருவருக்கும் இடையேதான் தமிழிலும், தெலுங்கிலும் கடும் போட்டியும் கூட.

மாறி மாறி முன்னணிக்கு வந்து இரு மாநிலத்து ரசிகர்களையும் குதூகலதத்தில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் இப்போது இந்தியிலும் பட்டையைக் கிளப்ப தயாராகி வருகிறார்கள்.

ஆசின் இந்திக்குப் போய் விட்டார். கஜினியின் ரீமேக்கில் ஆமீர்கானுடன் இணைந்து நடித்து வருகிறார். இதுதவிர மேலும் இரு படங்களையும் ஈர்த்துள்ளார்.

இந்த நிலையில் திரிஷாவும் இந்திக்குக் கிளம்பியுள்ளார். ஆசின் இந்திக்குப் போய் விட்ட நிலையில் தானும் இந்தி களம் புக சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தார் திரிஷா.

இந்த நிலையில், லேசா லேசா படத்தில் திரிஷாவை இயக்கிய பிரியதர்ஷன் இந்தியில் தான் இயக்கி வரும் நான்கு படங்களில் ஒன்றில் திரிஷாவை நடிக்க வைக்க முயன்றார்.

இருப்பினும் இந்த வாய்ப்பை உடனடியாக ஏற்கவில்லை திரிஷா. வலுவான கதையுடன் இந்தியில் புக வேண்டும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். இந்த நிலையில்தான் செல்வராகவன் இந்தியில் ஒரு படம் இயக்கப் போவதாக அறிந்தார் திரிஷா.

இதையடுத்து அவரை அணுகி அப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டார். செல்வாவும் ஓ.கே. சொல்லி விட்டார். இதனால் செல்வாராகவன் படம் மூலம் இந்தியில் நுழைகிறார் திரிஷா.

யுடிவி மற்றும் ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படம் செல்வாவின் இயக்கத்தில் தமிழில் வெளியான 7ஜி ரெயின்போ காலனியின் ரீமேக் ஆகும்.

சோனியா அகர்வால் கேரக்டரில் திரிஷா நடிக்கவுள்ளார். தமிழில் தற்போது திரிஷா நடித்து வரும் படங்களை இன்னும் ஒரு மாதத்திற்குள் முடித்து விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம் செல்வா. அதை முடித்த பின்னர் இந்தி ரெயின்போ காலனி தொடங்கவுள்ளதாம்.

சமீபத்தில் தெலுங்கில் செல்வா இயக்கத்தில் உருவாகி, வெளியாகி வெற்றி பெற்ற அடவரி ... படத்தின் நாயகி திரிஷாதான் என்பது நினைவிருக்கலாம். அப்படத்தில் செல்வாவுடன் ஏற்பட்ட நல்ல நட்பினால் இப்போது அவரது முதல் இந்திப் படத்திலும் நாயகியாகியுள்ளார் திரிஷா.

இந்திக்குப் போகும் முன்பு கார்த்தி, சந்தியாவை வைத்து இயக்கத் திட்டமிட்டுள்ள இது மாலை நேரத்து மயக்கம் படத்தை முடித்து விடத் திட்டமிட்டுள்ளாராம் செல்வா.

இதுகுறித்து செல்வா கூறுகையில், இந்தியில் விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளேன். நடிகர், நடிகைகள் குறித்து இன்னும் முடிவாகவில்லை. திரிஷா நாயகியாக நடிக்கக் கூடும்.

அதற்கு முன்பு இது மாலை நேரத்து மயக்கத்தை முடித்து விடத் திட்டமிட்டுள்ளேன். முதலில் இந்தப் படம்தான் வெளியாகும் என்றார் செல்வா.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil