»   »  திரிஷாவும், நான்கு இளைஞர்களும்!

திரிஷாவும், நான்கு இளைஞர்களும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கெளதம் வாசுதேவன் மேனனின் (நம்ம கெளதமேதான்) புதிய படத்தில் விஜயசாந்தி டைப்பில், சோலோ ஹீரோயினாக நடிக்கவுள்ளார் திரிஷா.

தென்னிந்திய ஸ்வீட் ஸ்டார் திரிஷாவின் கால்ஷீட் டைரியில் இடமே இல்லை. அந்த அளவுக்கு தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் கூப்பிட்டால் கொடுப்பதற்காக கொஞ்சம் போல இடத்தை ஒதுக்கி வைத்துள்ளாராம்.

இந்த நிலையில் கெளதம் மேனனின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் திரிஷா. படத்துக்குப் பெயர் சென்னையில் ஒரு மழைக்காலம். இந்தப் பெயரை எங்கேயோ கேட்டது போல இருக்கிறதா. சூர்யா, ஆசினை வைத்து இதே கெளதம் மேனன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட படம்தான் இது. ஆனால் சில பல காரணங்களுக்காக படம் டிராப் ஆகி விட்டது.

இப்போது அதே பெயரில் திரிஷாவை வைத்து இயக்கவுள்ளார் கெளதம். இப்படத்தில் திரிஷாதான் நாயகி. நான்கு ஹீரோக்கள். ஆனால் யாருமே ஏற்கனவே பழக்கமான ஆட்கள் கிடையாது. அத்தனை பேரும் புதுமுகங்கள். எனவே திரிஷாவின் ஹீரோயிசம்தான் படத்துக்குப் பக்க பலமாக இருக்கப் போகிறதாம்.

சமீபத்தில் தரமணியில் உள்ள டைடல் பூங்காவில் திரிஷா சம்பந்தப்பட்ட போட்டோ செஷனை முடித்துள்ளார் கெளதம்.

கெளதமின் உதவியாளரான வீரா, எஸ்.எஸ். மியூசிக் வீஜே ஷாம், டான்ஸர் சதீஷ் (உன்னாலே உன்னாலே ஹீரோ வினய்யின் தோஸ்த் இவர்) மற்றும் ஸ்ரீதேவியின் உறவினரான கார்த்திக் ஆகியோர்தான் ஹீரோக்களாக நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் கை கோர்க்கிறார் கெளதம். அவரது முதல் படமான மின்னலே முதல் கடைசிப் படமான பச்சைக்கிளி முத்துச்சரம் வரை ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைத்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்.

பாதியில் தொங்கிக் கொண்டுள்ள வாரணம் ஆயிரம் படத்திற்கும் கூட ஹாரிஸ்தான் இசை. ஆனால் திடீரென புதிய படத்திற்கு ரஹ்மானைப் போட்டுள்ளார் கெளதம். இதனால் ஹாரிஸ் கொஞ்சம் போல கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படம் இசை குறித்த சப்ஜெக்ட்டாம். உடனே தில்லானா மோகனாம்பாள் லெலவுக்கு படம் குறித்து கற்பனை செய்து கொள்ள வேண்டாம். இந்த இசை, இந்தக் கால இளசுகள் சம்பந்தப்பட்டது. அத்தோடு ஐ.டி. தொழிலையும் கதையுடன் பின்னிப் பிணைத்துள்ளாராம் கெளதம்.

இப்படத்தை, ஐ.டி. பார்ட்டிகளையும், மல்ட்டிபிளக்ஸ் கூட்டத்தினரையும் மனதில் வைத்தே எடுக்கப் போவதாக ஓப்பனாக கூறுகிறார் கெளதம்.(அப்ப, சுப்பம்மா, முனியம்மாக்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். படம் பார்க்க போகலாம்)

படம் குறித்து திரிஷா கூறுகையில், தனி ஹீரோயினாக நடிப்பது சநதோஷமாக இருக்கிறது. அதிலும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிப்பது என்றால் இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கதையை கெளம் சொன்ன விதம் புதுசாக, இளமையாக இருந்தது. கேட்டபோதே படத்தைப் பற்றிக் கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டேன். நிச்சயம் இப்படம் சினிமாவில் புதிய டிரண்டை உருவாக்கும் என்றார்.

சென்னையில் நிஜமான மழைக்காலமான அக்டோபர் மாதம் படப்பிடிப்பை ஆரம்பித்து அப்படியே வளர்க்கப் போகிறார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil