அட நம்புங்கப்பா... உண்மையாவே எனக்கு அந்த பிரச்சனை இருக்கு.. ஆலியா மானசா சொன்ன அந்த விஷயம்!
சென்னை: சின்னத்திரையில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக, லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகை ஆல்யா மானசா. தனது இயல்பான நடிப்பாலும், துறுதுறுப்பான முகபாவங்களாலும், ரசிகர்களுடன் எளிதில் ஒன்றிப்போகும் தன்மை கொண்ட ஆல்யா 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்து, விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில், சஞ்சீவுடன் ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். இதன் பின் ராஜா ராணி-2 தொடரில் நடித்தார். அந்த தொடரில் நடித்துக்கொண்டிருந்த போது அவர் கர்ப்பமாக இருந்ததால், தொடரில் இருந்து பாதியில் வெளியேறினார்.
குழந்தை பிறந்த பிறகு, சன் டிவி பக்கம் சென்ற ஆலியா, இனியா என்ற சீரியலில் நடித்தார். அந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாரிஜாதம் என்ற சீரியலில் இசை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள ஆலியா மானசா பல விஷயத்தில் மனம் திறந்து பேசி உள்ளார். அதில், ஜீ தொலைக்காட்சிகளில் முதல் முதலாக இப்பொழுதுதான் பாரிஜாதம் என்ற சீரியலில் நடிக்கிறேன். இந்த சீரியலில் இப்பொழுதுதான் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி இருந்தும் இந்த ஆண்டு நடந்த ஜீ டிவி குடும்ப விருது விழாவில் நான் கலந்து கொண்டதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

நடிகை ஆலியா மானசா: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் சீரியல் என்னை நினைத்து எழுதிய கதை போலவே இருக்கும். ஏன் என்றால், அந்த சீரியலில் நான் இசை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். அதில் எனக்கு சரியாக காது கேட்காது. நிஜமாகவே என்னுடைய ரியல் வாழ்க்கையிலும் எனக்கு கொஞ்சம் காது கேட்காது. அதற்காக காதே கேட்காது என்று சொல்லிவிட முடியாது. யாரவது பேசினால் அதற்கு என்னால் உடனடியாக பதில் அளிக்க முடியாது. என்ன சொன்னீங்க என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டுவிட்டு பதில் சொல்லிவிடுவேன், இது எனக்கு சிறுவயதில் இருந்தே நடக்கிறது. அது தான் இந்த பாரிஜாதம் சீரியல் கதையிலும் சொல்லி இருக்கிறார்கள் என்று ஆலியா மானசா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











